புது வசந்தம், பூவே உனக்காக, பிரியமான தோழி, வானத்தைப் போல, சூரிய வம்சம் என தமிழ் சினிமாவில் என்றென்றும் குடும்பத்துடன் பார்க்கும் படங்களை இயக்கிய இயக்குனர் என்ற பெருமையைப் பெற்றவர் விக்ரமன். இவரது மனைவி உடல்நலக்குறைவு காரணமாக இவர் பல ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகியுள்ளார்.


மகனுக்காக பதட்டப்பட்ட விக்ரமன்:


இவரது மகன் விஜய் கனிஷ்கா. இவர் முதன்முறை கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ஹிட் லிஸ்ட். இந்த படத்தின் நிகழ்ச்சியில் இயக்குனரும், விஜய் கனிஷ்காவின் தந்தையுமான விக்ரமன் பேசியதாவது, "என்னுடைய படங்களுக்கு கூட நான் இந்தளவு பதற்றமாக இருந்தது கிடையாது. என் மகன் 6 வருடங்களாக வாய்ப்பு தேடினான். இந்த படத்திற்காக நான் கே.எஸ்.ரவிக்குமாருக்குத்தான் நன்றி சொல்லனும்.


ஏனென்றால், இந்த படத்திற்காக முதலில் நான் வேறு ஒரு இயக்குனரை முடிவு செய்திருந்தோம். அவர் பட பூஜை போட்ட அடுத்த நாளே எனக்கு உடல்நிலை சரியில்லை என்று ஊருக்குச் சென்றுவிட்டார். என்ன நமது மகனுக்கு முதல் படமே இப்படி ஆகிவிட்டதே? என்று வேதனைப்பட்டேன்.


கே.எஸ்.ரவிக்குமாருக்கு நன்றி:


அப்போது எனக்கு கே.எஸ்.ரவிக்குமார் சார்தான் உறுதுணையாக இருந்தேன். என்னுடைய உதவி இயக்குனர்கள்தான் கூகுள் குட்டப்பா, ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் படத்தை இயக்குகின்றனர். என் உதவி இயக்குனர்களை அனுப்பி வைக்கிறேன் என்றார்.


நான் எதுக்காகவும் கவலைப்பட்டதே இல்லை. என் மகன் நல்லா படிக்குற பையன். பள்ளி படிக்கும்போது கூட பரீட்சைக்கு இரண்டு நாள் முன்னாடிதான் படிப்பான். ஆனா, 10ம் வகுப்பு தேர்வுல கணக்குல 100 மார்க் வாங்குனான். இந்த படத்துக்காக கே.எஸ்.ரவிக்குமார் சாருக்கு என் சார்பாகவும், என் குடும்பம் சார்பாகவும் நன்றி தெரிவிக்கிறேன்”


இவ்வாறு அவர் பேசினார். அவர் பேசும்போது என்னுடைய குடும்ப சூழல் உங்களுக்குத் தெரியும் என்று கூறி கண்கலங்கினார். அவருக்கு அடுத்து பேசிய அவரது மகனும், படத்தின் நாயகனுமாகிய விஜய் கனிஷ்காவும் எங்க அப்பாவை இப்படி பாத்ததே இல்லை என்று கூறி கண்கலங்கினார். இந்த படத்தின் சண்டை காட்சிகளுக்காக படத்தின் நாயகன் விஜய் கனிஷ்கா சிறப்பு பயிற்சியும் மேற்கொண்டதாக இயக்குனர் விக்ரமன் கூறினார்.


மேலும் படிக்க: Hit List Review: ஹிட் அடிக்குமா ஹிட் லிஸ்ட்? மகனை நல்ல ஹீரோவாக செதுக்கினாரா இயக்குநர் விக்ரமன்? முழு திரைவிமர்சனம்


மேலும் படிக்க: Indian 2 Audio Launch: ரசிகர்களே ரெடியாகுங்க! இந்தியன் 2 ஆடியோ லாஞ்ச் - வெளியானது தேதி!