சந்திரமுகி 2 படம் தான் ஏன் எடுத்தேன் என இயக்குநர் வாசு நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளது இணையத்தில் வைரலாகியுள்ளது. 


சந்திரமுகி - சந்திரமுகி 2


கடந்த 2005 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சந்திரமுகி படம் வெளியானது. பி.வாசு இயக்கிய இந்த படம் தமிழ் சினிமா வரலாற்றில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமையை பெற்ற படமாகும். சந்திரமுகி படத்தில் பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, நாசர், சோனுசூட், வினீத், மாளவிகா, செம்மீன் ஷீலா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.சந்திரமுகி படத்தை சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் பிரபு தயாரித்திருந்தார். வித்யாசாகர் இசையில் உருவான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது இதன் 2 ஆம் பாகம் உருவாகியுள்ளது. 


செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தில்  ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், ராதிகா லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் என பலரும் நடித்துள்ளனர். மரகதமணி இசையமைத்துள்ளார். இதனிடையே இயக்குநர் வாசு நேர்காணல் ஒன்றில் சந்திரமுகி படம் தான் ஏன் எடுத்தேன் என தெரிவித்துள்ளார். 


என்ன வித்தியாசம்? 


சந்திரமுகி படம் மலையாளத்தில் வெளியான மணிசித்திரதாழு படத்தின் ரீமேக் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. பாசில் இயக்கிய அப்படம் ஒரு மென்மையான படம் தான். ஒரு பண்டிகை தினத்தின் அப்படத்தை குடும்பத்தோடு பார்த்தேன். மோகன்லால் கூட பாதிக்கு மேல் தான் படத்தில் வருவார். ஆனால் படம் மிக அருமையாக இருந்தது. படம் பார்த்த மறுநாள் நான் வீட்டில் குளித்துக் கொண்டிருந்தேன். அப்போது யாரோ தட தடவென்று கதவை தட்டும் சத்தம் கேட்டுள்ளது. நான் யாரது? என கேட்கிறேன். 


மீண்டும் கதவை தட்டும் சத்தம் கேட்கிறது. நான் என் குரலை உயர்த்தி யார் என கேட்கிறேன். அதற்கு, ‘நான் தான் நாகவல்லி (சந்திரமுகி)’ என பயமுறுத்தும் குரல் கேட்கிறது. நான் கதவை திறந்தால் என்னுடைய நாலு வயசுப் பொண்ணு அபிராமி நின்று கொண்டிருந்தார். அந்த சின்ன பொண்ணு மனதில் அந்த கேரக்டர் பதிந்தது என்னை ஆச்சரியப்படுத்தியது. இதுதான் சந்திரமுகி படம் ஆரம்பிப்பதற்கான விதையாக விழுந்தது. 


அப்புறம் சந்திரமுகி படம் வெளியாகி 4 வாரம் கழித்து ஒருநாள் லதா ரஜினிகாந்த் போன் பண்ணாங்க. என்னிடம் நான் எவ்வளவோ படங்கள் பார்த்திருக்கிறேன். ஆனால் ‘வேட்டையனை பார்த்தால் லவ் பண்ணனும் போல ஃபீலிங் இருக்குது. அந்த கேரக்டரை பெரிதாக பண்ணுங்க’ என கேட்டார். நானும் அதை அப்பவே பண்றேன்னு சொன்னேன். ஆனால் சந்திரமுகி 2 படம், முதல் பாகத்தின் தொடர்ச்சி என சொல்ல முடியாது. இதுல வடிவேலு தவிர ரஜினி, பிரபு கேரக்டர் என எதுவுமே கிடையாது என அந்த நேர்காணலில் பி.வாசு தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க:Mark Antony: 'அனகொண்டாவுக்கு ஒண்ணும் ஆகல’.. ஆபாசமாக பேசும் விஷால்.. நெட்டிசன்கள் கடும் கண்டனம்..!