சென்னை நகரில் நள்ளிரவில் இருந்து பெய்த  கனமழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் ஃபிராங்க்பார்ட், டெல்லி, கொல்கத்தா ஆகிய ய 3  விமானங்கள் பெங்களூர் திரும்பிச் சென்றதோடு,8  விமானங்கள் தாமதமாகி, பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

 

சென்னை ( Chennai News ) : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் இருந்து இன்று அதிகாலை வரை இடி மின்னல் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில், விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டன.  டெல்லியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 154 பயணிகளுடன் நேற்று நள்ளிரவு 11:35 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தரை இறங்க வந்தது. அந்த நேரத்தில் பலத்த சூறைக்காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்தது கொண்டிருந்ததால், விமானம் தரை இறங்க முடியாமல், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

 

அதை போல் ஜெர்மன் நாட்டின் ஃபிராங்க்பார்ட் நகரில் இருந்து 268 பயணிகளுடன், நள்ளிரவு 12:05 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்க வந்த லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூர் திரும்பிச் சென்றது. அதைப்போல் இன்று அதிகாலை 1:15 மணிக்கு, கொல்கத்தாவில் இருந்து, 167 பயணிகளுடன் சென்னையில் தரையிறங்க வந்த, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் சென்னையில் தரை இறங்க முடியாமல், பெங்களூர் திரும்பிச் சென்றது.

 

மேலும் பாரிஸ் நகரில் இருந்து சென்னை வந்த ஏர் பிரான்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஹைதராபாத்தில் இருந்து வந்த, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னையில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரமாக வானில் வட்டம் வடித்து விட்டு, தாமதமாக தரையிறங்கின. அதைப்போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களான  பாங்க்காக், ஃபிராங்க்பார்ட், பாரிஸ் ஆகிய 3  விமானங்கள்,  தாமதமாக புறப்பட்டு சென்றன. சென்னையில் நேற்று நள்ளிரவில் இருந்து, இன்று அதிகாலை வரை சூறைக்காற்று, இடி மின்னலுடன் கனமழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் வருகை, புறப்பாடு 8 விமானங்கள், தாமதம் ஆகி, பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

 


சென்னையில் மழை:


சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் நள்ளிரவு முதல் தொடர்ந்து விடிய விடிய மிதமான கொட்டியது. குறிப்பாக கோடம்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணாசாலை, கிண்டி, சைதாப்பேட்டை மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய பகுதிகளில் மிதமானபெய்தது. தற்போது வரையில் கருமேகங்கள் கூடியிருப்பதால் சென்னை மாநகர் முழுவதும் இன்னும் இரவு நேரம் போன்றே காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில், மழைநீர் தேங்கியுள்ளதால் வாக ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதேநேரம், பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், இரவு நேரத்தில் பெய்த இந்த மழை குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியுள்ளதது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் மிதமான மழை பதிவானது.


புறநகர் பகுதிகளில் மழை: சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, ஆவடி மற்றும் அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் வானம் மேகமூட்டத்துடன் நிலவுவதோடு, லேசான மழையும் பெய்து வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் இதே நிலை தொடர்கிறது.