நடிகர் விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தின் இரண்டாவது பாடல் நேற்று வெளியான நிலையில், அதன் வரிகள் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஷால் கடைசியாக லத்தி சார்ஜ் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இதனைத் தொடர்ந்து அவரின் அடுத்தப்படமாக மார்க் ஆண்டனி தயாராகி உள்ளது. இந்த படத்தை த்ரிஷா இல்லானா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன், அசராதவன் படங்களை எடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். 


ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் நடிகை ரிது வர்மா ஹீரோயினாகவும், நடிகர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடிக்கிறார். மேலும் தெலுங்கு நடிகர் சுனில் குமார், செல்வராகவன், அபிநயா, ரெட்டின் கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மார்க் ஆண்டனி படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 
டைம் டிராவலை தொலைபேசி வழியாக நடக்கும் காட்சிகளாக கதை அமைக்கப்பட்டுள்ளது. 


மினி ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ள மார்க் ஆண்டனி படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படியான நிலையில் ரிலீசுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், அடுத்தடுத்து மார்க் ஆண்டனி படத்தின் அப்டேட்டுகள் வெளியாகவுள்ளது. அந்த வகையில் படத்தின் இரண்டாவது பாடலாக  ‘ஐ லவ்யூடி’ நேற்றி வெளியானது. ரோகேஷ் உடன் இணைந்து பாடலை எழுதியுள்ள இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், ரோஷினியுடன் இந்த பாடலை  பாடியுள்ளார். இப்பாடல் காதல் தோல்வி பாடலாகவும் அமைந்துள்ளது. 


ஆனால் இதில் இடம் பெற்றுள்ள வரிகள் கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. ‘பஜாரி, மூடு வரல’ என மோசமான வார்த்தைகளுடன், ரிது வர்மாவை நைட்டியுடன் ரோட்டில் ஆட வைக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பாடல் வரிகள் அடங்கிய வீடியோவின் கடைசியில் ரிது வர்மா விஷால் மீது பைக்கை ஏற்றுவது போல வந்து நிறுத்துகிறார். உடனே விஷால், ‘நல்லவேளை என் அனகொண்டாவுக்கு ஒண்ணும் ஆகல’ என சொல்கிறார். இதற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 


ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் விஷாலை ‘அனகொண்டா’ என சரமாரியாக ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். இப்படியான நிலையில் தன்னை தானே விஷால் ட்ரோல் செய்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.