சந்திரயான் - 3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதால், அந்த பகுதியை அடைந்த முதல் நாடு என்ற வரலாற்று சாதனையை இந்தியா படைத்தது.
இந்தநிலையில், சந்திரயான் - 3 நிலவுக்கு சென்றடைய முக்கிய காரணமாக இருந்த தமிழ்நாட்டை சேர்ந்தவரும், இஸ்ரோவின் திட்ட இயக்குனருமான வீரமுத்து வேலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். தற்போது, இதுகுறித்த வீடியோ இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.
அந்த தொலைபேசி பதிவு இதோ உங்களுக்காக, “வாழ்த்துகள்! வாழ்த்துகள்! சந்திரயான் விண்கலம் வெற்றிபெற்றது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கும், உலகளவிலும் பெருமையை தேடி தந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உங்களது அப்பாவின் பேட்டியை பார்த்தேன், உங்களை நினைத்து ரொம்ப பெருமைப்பட்டார். நீங்கள் தமிழ்நாட்டிற்கு வரும்போது தகவல் மட்டும் சொல்லுங்கள். நான் உங்களை சந்திக்கிறேன். கட்டாயம் சந்திக்கலாம். எல்லாரும் வாழ்த்து சொல்லுங்கள்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த இஸ்ரோ திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், “ மிக்க நன்றி சார், ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் உங்களது சர்வீஸ் ரொம்ப நல்லா இருக்கு சார்.” என்று தெரிவித்தார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) சந்திரயான் - 3 ஐ ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து 40 நாள் பயணத்திற்குப் பிறகு நேற்று மாலை 6. 04 மணிக்கு வெற்றிகரமாக தரையிறங்கியது. எந்தவொரு நாடும் பல முயற்சிகளை மேற்கொண்டு செய்யமுடியாததை, இந்தியா வெற்றிகரமாக செய்து சாதனை படைத்தது.
முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ”சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது தமிழகத்திற்கு ஒரு மகத்தான சாதனை உணர்வைக் கொண்டுவருகிறது. மயில்சாமி அண்ணாதுரை, எம் வனிதா மற்றும் இப்போது பி வீரமுத்துவேல் ஆகிய மூன்று சந்திராயன் பயணங்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விதிவிலக்கான சிந்தனையாளர்களால் வழிநடத்தப்பட்டுள்ளன. அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் நிபுணத்துவம் நம் அனைவரையும் ஊக்குவிக்கிறது.
தமிழ்நாட்டின் இளம் திறமையாளர்கள் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நமது இந்தியாவின் முன்னேற்றப் பயணத்தில் பங்களிக்குமாறு நான் ஊக்குவிக்கிறேன்!” என பதிவிட்டு இருந்தார்.
அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவுக்குப் பிறகு நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கிய நான்காவது நாடு என்ற பெருமையையும், நிலவின் தென்பகுதியில் முதன்முதலில் வெற்றிகரமாக தரையிறக்கிய பெருமையையும் இந்தியா படைத்துள்ளது.