தமிழ் சினிமா இயக்குநர்களில் மிகவும் பிரபலமானவர் இயக்குநர் கஸ்தூரி ராஜா. ஏராளமான ஹீரோக்களை இயக்கியுள்ள கஸ்தூரி ராஜா, நடிகர் விஜயகாந்த் உடனான அனுபவம் குறித்து சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணலில் பேசியிருந்தார். 


"விஜயகாந்த் மிகவும் தங்கமானவர். அவரை பாலோ செய்தாலே முன்னேறி விடலாம் அந்த அளவுக்கு திறமையானவர். இன்று இருக்கும் நடிகர்கள் எல்லாம் தங்களுக்கு ஏற்றார் போல் காட்சிகளை மாற்றி வைக்க சொல்கிறார்கள் என பல கதைகளை கேள்விப்படுகிறோம்.


ஆனால் விஜயகாந்த் சார் தனக்கு ஏதாவது காட்சியை மேன்மைப்படுத்தலாம் என தோன்றினால் அதை வந்து சொல்லி, இதில் உங்களுக்கு ஓகே என்றால் எடுத்துக் கொள்ளுங்கள் என குழந்தை போல சொல்வார். இயக்குநர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுப்பார். மிகவும் எளிமையானவர். யாரையும் வித்தியாசமாக பார்க்கமாட்டார். அனைவரிடத்திலும் ஒன்று போலவே பழகுவார் 


 



விஜயகாந்த் ஹீரோவாக நடிப்பதற்கு முன்னரே எனக்கு நல்ல பழக்கம். நாங்கள் இருவருமே மதுரைக்காரர்கள் என்பதால் கூடுதல் பிணைப்பு. எனக்கு அவர் மேல் தனி பாசம், நெருக்கமான தோழமை எப்போதுமே இருக்கும். அவருக்காக என்னுடைய மனைவி படப்பிடிப்பு சமயத்தில் சமைத்து கொடுப்பார். அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராக தான் பார்க்கிறோம். 


என்னுடைய மகள் டாக்டருக்கு படிப்பதற்காக பரீட்சை எழுதியதில் கட் ஆஃப்  மார்க்குக்கு ஒரு மார்க் கம்மியாக எடுத்ததால் தேம்பி தேம்பி அழுது கொண்டு இருந்தாள். அந்த நேரம் எதேச்சையாக வீட்டுக்கு வந்த விஜயகாந்த் “இதுக்காகவே பாப்பா அழுவுது?” என சொல்லி எங்களுடன் காலேஜூக்கே வந்தார். “பணம் கொஞ்சம் செலவு செய்யணும்” என்றார். என்னால் முடியாது என சொன்னதும், “நீங்கள் எதுக்கு தான் பிள்ளைகளை பெற்றுக்கொள்கிறீர்களோ?” எனக் கேட்டார். 


 



வேண்டியவர்களை தொடர்பு கொண்டு எப்படியோ பேசி டாக்டர் சீட் வாங்கி கொடுத்துவிட்டார் கேப்டன். இன்று என்னுடைய மகள் மகப்பேறு மருத்துவராக இருக்கிறாள். அப்பல்லோ மருத்துவமனையில் மிகப்பெரிய சர்ஜனாக ஏராளமான சர்ஜரிகளை வெற்றிகரமாக முடித்து இருக்கிறாள் என்றால் அதற்கு கேப்டன் தான் காரணம்.


விஜயகாந்த் தன்னுடைய மகன் நடித்த படத்தின் ஆடியோ லான்ச் வைத்து இருந்தார். நான் அங்கு சென்று இந்த விஷயத்தை சொல்லியே ஆகவேண்டும் என சொன்னேன். கஸ்தூரி ராஜா மகள் ஒரு டாக்டர் என்பதற்கு பின்னால் இப்படி ஒரு கதை இருக்கிறது. இன்றும் இதை நினைத்துப் பார்க்க வைக்கிறார் அல்லவா? அவர் தான் விஜயகாந்த்” என மிகவும் சந்தோஷமாக பேசி உள்ளார் இயக்குநர் கஸ்தூரி ராஜா. 


மேலும் படிக்க: Annapoorani Review: சாதிக்கும் துடிப்புடன் கரண்டி பிடித்த நயன்.. அறுசுவை விருந்து படைத்தாரா.. அன்னபூரணி விமர்சனம்!


Jigarthanda Double X OTT Release: காத்திருந்தது போதும்! நெட்ஃப்ளிக்ஸில் களமிறங்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் - எப்போது தெரியுமா?