தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடப்படும் நடிகை நயன்தாராவின் 75ஆவது திரைப்படமாக ‘அன்னபூரணி’ இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. கோலிவுட் தாண்டி, டோலிவுட், பாலிவுட் எனக் கலக்கி வரும் நயன்தாரா, மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்பி, புதுமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடித்துள்ளார். நடிகர்கள் ஜெய், சத்யராஜ், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் குமார், அச்யுத் குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள படத்தில் அன்னபூரணியாக நயன் ரசிகர்களை ஈர்த்தாரா?


கதைக்களம்




பிறந்த குழந்தை முதலே நுண்ணிய சுவையையும் தனித்து அறியும் Enhanced Taste buds கொண்டவர், உணவின் மேல் காதல் பொங்க வளரும் குழந்தை அன்னபூரணி. ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சமையல் சேவை புரியும் ‘ஆச்சார’ பிராமண குடும்பத்தில் பிறந்தவரான அன்னபூரணிக்கு நாடு போற்றும் செஃப் ஆக வேண்டும் என்பது கனவு.


மீன் வாசம்கூட பிடிக்க விடாமல் திருப்பி நடத்தும் குடும்பத்தில் பிறந்த அன்னபூரணி, செஃப் ஆக குடும்பப் பின்னணியும் அதன் கலாச்சாரங்களும் தடையாக இருக்கிறது. அப்பா பெண்ணான அன்னபூரணி ஒரு கட்டத்தில் தன் லட்சியமே முக்கியம் என வீட்டை விட்டுக் கிளம்ப, தான் பார்த்து இன்ஸ்பயர் ஆகி வளர்ந்த செஃப் ஆனந்த் சுந்தரராஜனை (சத்யராஜ்) சந்திக்கிறார். தன் லட்சியத்துக்காக வீட்டைத் தாண்டி வந்த அன்னபூரணிக்கு வெளி உலகில் விரிந்து கிடக்கும் தடைகள் என்ன, அன்னபூரணியின் ஆசைகளை அவரது குடும்பம் புரிந்து கொண்டதா எனும் டெம்ப்ளேட் ஹீரோயின் செண்ட்ரிக் கதையும், அதற்கான விடைகளுமே படம்!


‘அன்னபூரணி’ நயன்


தமிழ் சினிமாவில் நாம் பார்த்து சலித்த வழக்கமான பிராமண குடும்பப் பின்னணி, அதில் நாயகி படும் கஷ்டங்கள் எனத் தொடங்கும் கதையில், செஃப் ஆக வேண்டும் என தூக்கத்திலும் விடாமல் துரத்தும் கனவுடன் வடிவமைக்கப்பட்டுள்ள அன்னபூரணி கதாபாத்திரம், ஒற்றை ஆளாக நம்மை ஒன்ற வைக்கிறது.




இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணாவின் முதல் படத்தில் கதையின் நாயகி, ‘உணவுப்பிரியை’ அன்னபூரணியாக நயன்தாரா. தனக்குப் பிடித்தமான ஹீரோயின் சார்ந்த கதைக்களத்தை தேர்வு செய்து ஆடியன்ஸூக்கு அறுசுவை விருந்து படைத்துள்ளார். லட்சியம் மின்னும் கண்களுடன் கரண்டி பிடிப்பது, குடும்பப் பின்னணி தாண்டி அசைவ உணவு சமைப்பது, சுவைப்பது, அப்பாவின் அங்கீகாரத்துக்காக ஏங்குவது என அன்னபூரணியாக நம்மை படத்துடன் ஒன்ற வைத்து ரசிக்க வைக்கிறார்.


கதாபாத்திரங்கள்


நயன்தாராவுக்கு அடுத்ததாக படத்தில் ஸ்கோர் செய்திருப்பது அவரது அப்பாவாக நடித்துள்ள அச்யுத் குமார். தன் ஜெனரேஷனுக்கு தேவையான முற்போக்குடன் மகளிடம் பாசம் கலந்து கண்டிப்பு காட்டும் தந்தையாக மிளிர்கிறார். சிறு வயது நயன்தாராவாக அறிமுகமாகும் குழந்தை அன்னபூரணி, நயனைத் தாண்டி நம் இதயங்களை கொள்ளை கொள்கிறார்.




ஹீரோயின் சார்ந்த கதைக்களத்தில் ஊறுகாய் போல் நடிகர் ஜெய். பெரிதாக ஸ்கோப் இல்லாவிட்டாலும் நயன்தாராவுடனான காட்சிகளில் ராஜா ராணி கெமிஸ்ட்ரியை நினைவூட்டுகிறார். கே.எஸ்.ரவிக்குமார், சத்யராஜ் கதாபாத்திரங்கள் சரியான பொருத்தம். படத்துக்கு வில்லன் கட்டாயம் வேண்டும் என வலிந்து திணிக்கப்பட்ட பாத்திரத்தில் கார்த்திக் குமார், கதைக்கு தேவையானதை செய்து வெறுப்பை சம்பாதிக்கிறார்.


நிறை, குறை


பிராமண கட்டுக்கோப்பான குடும்பம், ஆச்சாரம் என ஸ்ரீரங்கத்தில் தொடங்கி கதை விரிந்தாலும், கதைக்கு தேவையான அரசியலை படம் பேசும் விதத்தில் கவனமீர்க்கிறது. நாம் உண்ணும் உணவைத் தேர்ந்தெடுப்பது தனி நபர் விருப்பம், சமைப்பது, சாப்பிடுவது சார்ந்த தேர்வுகள் பற்றிய காட்சிகள் தெளிவு. துளுக்க நாச்சியார் பற்றிய குறிப்புகள், இந்து - முஸ்லீம் நட்பு, காதல் பற்றிய உரையாடல்கள் கவனமீர்க்கின்றன.


அக்ரஹாரத்தில் தொடங்கி, 7 ஸ்டார் ஹோட்டல் வரை பின்னணி இசையில் தமன் வலுசேர்க்கிறார். “ஜெயிச்சாலும் தோத்தாலும் நான் அப்பவே சொன்னேன் இல்ல அப்படினு சொல்ல ஆளுங்க இருப்பாங்க”, “எந்தக் கடவுளும் கறி சாப்பிடக்கூடாதுனு சொல்லல”, “பிரியாணிக்கு ஏது மதம், அது ஒரு எமோஷன்” என்பன போன்ற வசனங்கள் அப்ளாஸ் அள்ளுகின்றன.




வழக்கமான டெம்ப்ளேட் ஹீரோயின் சார்ந்த கதைக்களத்தில் முதல் பாதியில் நிதானமாக பயணித்து, இரண்டாம் பாதியில் திண்டாட வைக்கிறார்கள். எளிதில் யூகிக்கக் கூடிய திரைக்கதை, கார்த்திக் குமாரின் பழிவாங்கல் காட்சிகள், நாம் தொலைக்காட்சிகளில் பார்த்து பழகிய குக்கு வித் கோமாளி, மாஸ்டர் செஃப் வகையிலான குக்கிங் காம்பிடிஷன் காட்சிகள் என இரண்டாம் பாதி நம்மை சோர்வடைய வைக்கிறது. 


ஆனாலும் வுமன் செண்ட்ரிக் கதைக்களத்தில் தடைகளைத் தாண்டி நயன்தாரா ஜெயித்து ஜொலிப்பதை சந்தோஷமாக பார்த்து ரசிக்க விரும்புபவர்கள் குடும்பத்துடன் சென்று பார்த்து ரசிக்கலாம்!