இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தன்னுடைய பச்சைக்கிளி முத்துச்சரம் படம் எப்படி உருவானது என்பது பற்றி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உள்ள கௌதம் மேனன். மின்னலே படம் மூலம் இயக்குநராக அவர் இரண்டாவதாக கமலை வைத்து வேட்டையாடு விளையாடு படத்தை இயக்கி கவனிக்கத்தக்க இயக்குநராக மாறினார். இதனையடுத்து கடந்த 2007 ஆம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தை இயக்கினார். ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் சரத்குமார், ஜோதிகா, ஆண்ட்ரியா, மிலிந்த் சோமன் என பலரும் நடித்திருந்தனர்.


ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இப்படம் 2005 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க திரில்லர் திரைப்படமான Derailed-யை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக ஆண்ட்ரியா அறிமுகமாகினார். முழுக்க முழுக்க த்ரில்லர் காட்சிகளை கொண்ட பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் உருவான விதத்தை கௌதம் மேனன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 






அதில், “வேட்டையாடு விளையாடு படம் முடிந்த பிறகு கமல் என்னிடம் வேறு எதாவது வழக்கமான கதை இருக்கிறதா? என கேட்டார். இதனைத் தொடர்ந்து அடுத்த ஒரு மாதத்தில் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் கதையை நான் எழுதினேன். அவரிடம் கதை சொல்ல வேண்டும் என சொல்லவும் என்னை கொச்சினுக்கு வர சொன்னார். அங்கிருந்து திரும்பும்போது விமானத்தில் வைத்து அந்த படத்தின் கதையை நான் கமலிடம் சொன்னேன். அதைக் கேட்டு விட்டு இந்த கதை ரொம்ப நல்லா இருக்கு. ஆனால் எனக்கு செட்டாகாது என கமல் தெரிவித்து விட்டார். 


அதன்பிறகு பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் கதையை நான் சேரன், மாதவன், ஆர்யா ஆகியோரிடம் தெரிவித்தேன். அதன்பிறகு தான் ஏதேச்சையாக ஒரு சந்திப்பில் நடிகர் சரத்குமாரிடம் தெரிவித்தேன். அவர் ரொம்ப நல்லாருக்கு, நான் பண்றேன் என சொன்னார். அப்படித் தான் அந்த படத்திற்குள் சரத்குமார் வந்தார்" என கௌதம் மேனன் தெரிவித்திருந்தார். இந்த தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக ஆண்ட்ரியா கேரக்டருக்கு தான் தபு, கமாலினி முகர்ஜி மற்றும் ஷோபனா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: Manjummel Boys: மலையாள சினிமா வரலாற்றை மாற்றி எழுதிய மஞ்சும்மல் பாய்ஸ்! ரூ.200 கோடி வசூலித்த முதல் படம்!