மஞ்சும்மல் பாய்ஸ் (Manjummel Boys) திரைப்படம் ரூ.200 கோடி வசூலை எட்டியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


மலையாள சினிமா வரலாற்றில் புது சாதனை




மலையாள இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்.22ஆம் தேதி நேரடி மலையாள திரைப்படமாக வெளியான மஞ்சும்மல் பாய்ஸ், யாரும் எதிர்பாராத வகையில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.


சௌபின் சாஹிர் தயாரிப்பு, நடிப்பு, ஸ்ரீநாத் பாஸி உள்ளிட்ட மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகர்கள், இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாமின் இசை என பெரிய ஸ்டார் நட்சத்திரங்கள் இல்லாமல், புதிய அலை பட்டாளத்துடன் களமிறங்கிய மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழு, மலையாள சினிமா தாண்டி ரசிகர்களை கட்டிப்போட்டது.


தமிழ்நாட்டில் மட்டும் ரூ.50 கோடி!


குறிப்பாக குணா குகை, கண்மணி அன்போடு பாடல், பாய்ஸ் ட்ரிப், விறுவிறு சஸ்பென்ஸ், மலையாளம், தமிழ் கலந்த வசனங்கள் உள்ளிட்ட காரணங்களால் தமிழ் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து, தமிழ் திரைப்படங்களை எல்லாம் திரையரங்குகளில் ஓரம் கட்டி ரூ. 50 கோடிகளுக்கும் மேல் தமிழ்நாட்டிலும் வசூலித்துத் தள்ளியுள்ளது.


இந்நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடிகளை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.






இதுவரை அதிகம் வசூலித்த படங்கள்!


மலையாளத்தில் இதுவரை மோகன் லால், மம்மூட்டி உள்ளிட்ட சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்கள் கூட ரூ. 200 கோடிகள் என்ற மைல்கல்லை எட்டியிதிராத நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் 200 கோடிகளை வசூலித்துள்ளது அத்திரையுலகினரையே கொஞ்சம் கலக்கத்தில் தான் ஆழ்த்தியுள்ளது.


முன்னதாக டோவினோ தாமஸ் நடித்த 2018 திரைப்படம் 175.5 கோடிகளை வசூலித்தது. அதற்கு அடுத்தபடியாக மோகன் லாலின் புலிமுருகன், லூசிஃபர் ஆகிய திரைப்படங்கள் ரூ.152 மற்றும் ரூ.127 கோடிகளை வசூலித்துள்ளன.  இந்த வரிசையில் முன்னதாக இதேபோல் இளைஞர் பட்டாளத்தைக் கொண்டு களமிறங்கிய ‘ப்ரேமலு’ திரைப்படமும் ரூ.115 கோடிகளுடன் இந்த ஆண்டு இடம்பிடித்துள்ளது.


இந்நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் தற்போது ரூ.200 கோடிகளை வசூலித்துள்ளது மலையாள சூப்பர் ஸ்டார்களான மோகன்லால், மம்மூட்டி ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.


மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினரை ஏற்கெனவே கமல்ஹாசன் உள்ளிட்ட தமிழ்நாட்டின் டாப் நடிகர்கள் நேரில் அழைத்துப் பாராட்டிய நிலையில், கொடைக்கானல், குணா குகைக்கு இப்பட வெளியீட்டுக்குப் பின் சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.