இந்தியாவில் 2014 ஆம் ஆண்டுக்குப் பின்  மதவாதம் தான் இங்கு தலைதூக்கியுள்ளது என இயக்குநர் அமீர் குற்றம் சாட்டியுள்ளார். 


2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரவுள்ளது. ஏற்கனவே கடந்த ஓராண்டாக தேசிய, மாநில அரசியல் கட்சிகள் களப்பணியை தொடங்கி விட்டது. இன்னும் சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் தொடங்கி விட்டது. இதில் எந்த கட்சிகள் கூட்டணி அமைக்கும், தனித்துப் போட்டியிடும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


இப்படியான நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் 3வது முறையாக ஆட்சிக்கு வர பாஜக கூட்டணி முழு வீச்சில் களம் கண்டுள்ளது. அதேசமயம் பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணியில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளது. இப்படியான நிலையில் இயக்குநர் அமீர், பாஜக ஆட்சிக்கு வந்தபின் இருக்கும் சில விஷயங்கள் என தனது கருத்துகளை நேர்காணல் ஒன்றின்போது தெரிவித்துள்ளார். 


அதாவது, “2014 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இந்தியா இருந்த நிலைமை இப்ப இல்ல என்பதை நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அந்த காலக்கட்டத்தில் ஊழல், லஞ்சம் ஆகிய விஷயங்கள் இருந்தது. அது ஒழிய வேண்டும் என்பது தான் எல்லாருடைய எண்ணமாக உள்ளது. ஆனால் ஊழல் நம்முடைய அன்றாட வாழ்வில் ஊறிப்போன விஷயம் என்பதில் நாம் அனைவருமே வெட்கப்பட வேண்டும். ஆனால் 2014க்கு பின் மதவாதம் தான் இங்கு தலைதூக்கியுள்ளது. 


2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் இந்த நாடு என்னவாக இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. தேர்தல் நடக்குமா, மதச்சார்புள்ள நாடாக இருக்குமா, எல்லாருக்கும் ஒரே சட்டம் இருக்குமா என என்ன சூழல் இருக்கும்ன்னு தெரியாது. ஒருவேளை 2024 தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் இந்த நாடு எங்கே போய் நிற்கும் என்ற குழப்பமும்  அச்சமும் உள்ளது. ஏனென்றால் உச்சநீதிமன்றங்கள் எல்லாம் பாஜகவின் உறுப்பினர்களாக மாறி நிற்கக்கூடிய சூழலை நாம் பார்க்கிறோம். ஞானவாபி மசூதியில் கூட உள்ளே போய் வழிபடலாம் என சொல்கிறார்கள்.


அது உண்மையாக இருந்தால் கூட ஒரு அக்கறை எடுத்து பேசியிருக்கலாம். இவ்வளவு சர்ச்சைக்குரிய விஷயத்தை கவனத்தில் கொள்ளாமல் புதிய பிரச்சினையை தொடங்க வைக்கும் அளவுக்கு நீதிமன்றம் வந்து விட்டது. வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தல் இதை நோக்கியதாகவே இருக்கிறது” என தெரிவித்துள்ளார். 




மேலும் படிக்க: Director Ameer: விஜய்யின் அரசியல் வருகை காலத்தின் கட்டாயம் - இயக்குநர் அமீர் வரவேற்பு!