நடிகர்கள் கட்சி தொடங்கினால் ஜெயிக்கலாம் என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது என பிரபல அரசியல் பிரமுகர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் (Tamilaga Vettri Kazhagam) என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அடுத்தாண்டு முதல் சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் வருகைக்கு அரசியல் வட்டாரத்திலும், திரையுலக வட்டாரத்திலும் ஆதரவும், எதிர்ப்பு ஒருங்கே கிளம்பியுள்ளது. இப்படியான நிலையில் நடிகரும், அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத் விஜய் அரசியல் பற்றி பேசியுள்ளார். 


நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள அவர், “விஜய் அரசியலில் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். எம்ஜிஆரை விட சிவாஜி தான் சிறந்த நடிகர். மற்ற நடிகர்களுக்கு உதடு பேசும் என்றால் சிவாஜிக்கு உடலே பேசும். அந்த சிவாஜியே தேர்தலில் ஜானகி அணியுடன் கூட்டணி வைத்து தோத்தாரு. அதன்பின் ஜனதா தளத்தில் கட்சியை ஒப்படைத்து விட்டு சென்றார். இதிலிருந்து விஜய் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். சாதி செல்வாக்கு உள்ளவர், நல்ல காதல் படங்களை தந்து உள்ளத்தை அள்ளிக்கொண்டவர் கார்த்திக் நேதாஜி சுபாஷ் சந்திரபோஷின் பேரை சொல்லக்கூடிய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் என சொன்னார். எம்ஜிஆரின் கலையுலக வாரிசு பாக்யராஜ், திறமைசாலி டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் அரசியலில் ஜொலிக்கவில்லை. அதனால் நடிகர்கள் கட்சி தொடங்கினால் ஜெயிக்கலாம் என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது. 


விஜயகாந்த் வந்தார், விளிம்பு நிலை மக்களின் ஆதரவை பெற்றார். அவர் நல்லவர் என்ற பெயர் வாக்காளர் மத்தியில் கிடைத்தது. விஜயகாந்த் எதிர்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை பெற அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தார். அங்கு தான் அவரின் வீழ்ச்சி ஆரம்பமானது. கூட்டணி இல்லாமல் ஒருவரால் ஜெயிக்க முடியும். மிகப்பெரிய வாக்கு வங்கியை கொண்ட திமுக,அதிமுகவை தாண்டி அவர் சிந்திக்க வேண்டும். காரணம் அவ்வளவு பிரச்சினை உள்ளது. 


அரசியலுக்கு விஜய் வரப்போறார் என்றால் நிறைய ஆபத்து வரும். அதை தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும். உச்சத்தில் இருக்கும் கதாநாயகன் என்ற ஒரு விஷயம் தான் விஜய்க்கு பிளஸ் பாயிண்டாக உள்ளது. அவர் ஒன்றும் மார்க்கெட் போன ஹீரோ அல்ல. அதை உதறி தள்ளிவிட்டு வருவது மக்களிடத்தில் நம்பிக்கையை கொடுக்கும். விஜய் தனது அறிக்கையில் கூட அரசியல் பொழுதுபோக்கு அல்ல, வேட்கை. அதற்கான அதிகாரம் வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வருகிறேன் என சொன்னது மிகப்பெரிய அளவில் எடுபடும். 


விஜய் எந்த கொள்கையுடன் வருவார் என தெரியவில்லை. தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் நிறைய இருக்கு.  இதை தீர்ப்பதற்கான திட்டம், லட்சியங்களையும் அறிவித்து விட்டு வர வேண்டும். விஜய்யை பாஜகவின் பி டீம் என சொன்னார்கள். அப்படி இருந்தால் அவர் அரசியலில் காணாமல் போய் விடுவார். ஆந்திராவில் விஜய்யை விட அதிக கூட்டம் கொண்டவர் சிரஞ்சீவி. அவரால் கட்சி நடத்த முடியாமல் போய்விட்டது. சினிமா மட்டுமே அரசியலில் சாதிக்க தகுதி கிடையாது. நீ சார்ந்திருக்கிற சமூகம் காணும் கனவுகளுக்கு உன்னிடம் சிறகு இருக்கிறதா, அவனுடைய தேவைகளுக்கு உன்னிடத்தில் பதில் இருக்கிறதா என்பதை பொறுத்து விஜய் மக்கள் தலைவனாக உயர வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார்.