தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்தார். மிமிக்கிரி கலையால் பொதுவெளியில் அறியப்பட்ட இவர் 1984ல் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். சிறிய பெரிய வேடங்களில் நடித்து வந்த இவர் கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற பெரிய படங்களில் நடித்துள்ளார். 2000ம் ஆண்டுக்கு பிறகு பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்ததன் மூலம், பலரும் அறியப்படும் நடிகராக திகழ்ந்தார்.



மயில்சாமி மரணம்


நடிகர் விவேக் உடன் இவர் இணைந்து நடித்த பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். மேலும் சினிமாவையும் தாண்டி பொதுநலம் தொடர்பான விஷயங்களிலும் கவனம் செலுத்தி மக்களின் நன்மதிப்பை பெற்று வந்த இவர் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவர் உயிரிழந்த சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவர் மறைந்தபின்புதான் இவர் செய்து வந்த நற்செயல்கள் வெளியில் தெரிய ஆரம்பித்தன. இவர் மரணத்தை ஒட்டி திரையுலகமே சோகத்தை வெளிப்படுத்தியது.


தொடர்புடைய செய்திகள்: Chhavi Mittal : குழந்தைகளுக்கு உதட்டில் முத்தம்... பாலியல் அத்துமீறல் என விமர்சித்த நெட்டிசன்கள்.. புகைப்படங்களுடன் பதிலடி தந்த நடிகை!


சிவராத்திரி வழிபாட்டிற்கு அழைத்தார்


அவர் இறப்பதற்கு முன்னர் சிவராத்திரி வழிபாட்டிற்கு இரவு முழுவதும் கோயிலில் இருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன. இது குறித்து சமீபத்திய நேர்காணலில் பேசிய எம்.எஸ்.பாஸ்கர், அவரையும் இரவு சிவராத்திரி வழிபாட்டிற்கு வருமாறு அழைத்ததாக கூறி உள்ளார். மேலும் பேசிய அவர், "எனக்கு போன் செய்து சிவராத்திரி அன்னைக்கு கோயிலுக்கு போறேன் வர்றியான்னு கேட்டார். நான் ஷூட்டிங்ல இருக்கேன்ன்னு சொன்னேன். 18 ஆம் தேதிதான்னு சொன்னாரு. அன்னைக்கும் ஷூட்டிங்லதான் இருக்கேன்னு சொன்னேன். கோயிலுக்கு போறேன், சொல்ல வேண்டியது என் கடமை. வேல இருந்துதுன்னா பாருன்னு சொல்லிட்டு போய்ட்டாரு", என்று கூறினார். 



அதிகாலையில் திணறல்


இறந்த அன்று நடந்தது குறித்து பேசுகையில், "19 ஆம் தேதி காலைல நான் ஷூட்டிங் முடிச்சு 3 மணிக்கு என் வீட்டுக்கு போறேன், அவர் அவரோட வீட்டுக்கு கிட்டத்தட்ட அதே நேரத்துக்கு போறாரு. வீட்ல போய் பசிக்குதுன்னு சொல்லிருக்காரு, அவர் பசங்க டிஃபன் கொடுத்துருக்காங்க. சாப்ட்ருக்காரு. நெஞ்சுலயே நிக்குதுன்னு சொல்லவும், வெந்நீர் கொடுத்துருக்காங்க. அப்புறம் பசங்க மேல போய் தூங்கிட்டாங்க. கொஞ்ச நேரம் கழிச்சு அவர் மனைவி போன் பண்ணி, ரொம்ப திணறிட்டு இருக்காருன்னு சொன்னாங்க. அப்புறம் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போலாம்ன்னு கார்ல ஏறி போகும்போது, அந்த தெருவ தாண்டுறதுக்குள்ள அவர் மகன் மடியிலேயே விழுந்துட்டாரு" என்றார்.