நடிகர் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவாகியுள்ள தூமம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஃபஹத் ஃபாசிலின் பான் இந்தியா படம்
மல்லுவுட் கடந்து தமிழ், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து தன் நடிப்புக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் ஃபஹத் ஃபாசில். இறுதியாக மலையாளத்தில் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் 'பாச்சுவும் அத்புத விளக்கும்' திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படம் சென்ற வாரம் ஓடிடி தளத்திலும் வெளியானது.
இதனையடுத்து தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் ஃபஹத் இணைந்து நடித்துள்ள ‘மாமன்னன்’ திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. மற்றொருபுறம் தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் ஃபஹத் இணைந்து நடித்துள்ள புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் முழுவீச்சில் தயாராகி வருகிறது.
இந்நிலையில் புகழ்பெற்ற ஹோம்பாலே நிறுவனத் தயாரிப்பில் ஃபஹத் நடித்துள்ள ‘தூமம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனமீர்த்துள்ளது.
கன்னட திரைப்படமான லூசியா (தமிழில் சித்தார்த் நடித்த எனக்குள் ஒருவன்) மற்றும் தமிழ் - தெலுங்கில் சமந்தா நடிப்பில் வெளியான யூ டர்ன், ஆகிய திரைப்படங்களை இயக்கி கவனமீர்த்த கன்னட இயக்குநர் பவன் குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
ட்ரெய்லர் ரிலீஸ்
நடிகை அபர்ணா பாலமுரளி, மகேஷிண்டே பிரதிகாரம் படத்துக்குப் பிறகு இந்தப் படத்தில் ஃபஹத் உடன் இரண்டாம் முறையாக இணைந்துள்ளார். மேலும், நடிகர் ரோஷன் மாத்யூ உள்ளிட்ட பல நடிகர்களும் இந்தப் படத்தில் இணைந்துள்ள நிலையில், சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகியுள்ளது.
ஏற்கெனவே பவன் குமார் சைன்ஸ் ஃபிக்ஷன் படங்களை இயக்கி வெற்றிகண்டுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லரும் விறுவிறுப்பு கூட்டும் வகையில் அமைந்து, இணையத்தில் கவனமீர்த்து வருகிறது.
முன்னதாக தூமம் படத்தின் வித்தியாசமான போஸ்டர்கள் வெளியாகி கவனமீர்த்து லைக்ஸ் அள்ளின. இந்நிலையில், மலையாளத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது.
வரும் ஜூன் 23ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், நடிகர் பிரபாஸ் - க்ரித்தி சனோன் நடிப்பில் உருவாகியுள்ள ஆதி புருஷ் திரைப்படமும் பான் இந்தியா திரைப்படமாக வரும் ஜூன் 16ஆம் தேதி வெளியாக உள்ள சூழலில், ஃபஹத்தின் தூமம் படம் ஆதி புருஷ் படத்துடன் போட்டி போட்டு கவனம் ஈர்க்குமா என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்.
மேலும் படிக்க: Por Thozhil Review: சீரியல் கில்லர் கதை...சீட்டின் நுனியில் உட்கார வைத்ததா? ’போர் தொழில்’ திரைப்படத்தின் முழு விமர்சனம்!