Por Thozhil Review: கரடுமுரடான உயர் க்ரைம் ப்ரான்ச் அதிகாரி லோகநாதன் (சரத்குமார்) தலைமையின் கீழ், விளையாட்டுப்பிள்ளை லுக்கில், புத்தக அறிவு மேலோங்கிய பிரகாஷ் (அசோக் செல்வன்) புதிதாக போஸ்டிங் வாங்கிச் சென்று இணைகிறார்.
இந்நிலையில், திருச்சியை மையமாக வைத்து, ஒரே மாதிரியான தொடர் கொலைகள் எந்தவித தங்கு தடயமுமின்றி அரங்கேறி மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்துகின்றன. இந்த வழக்கு அசோக் செல்வன் - சரத்குமார் இணையின் கைகளுக்கு வர, தொட்டதுக்கெல்லாம் கடுப்படிக்கும் சரத்குமாரின் தலைமையின் கீழ், அசோக் செல்வன் கடுப்புடன் கடமையாற்ற வருகிறார்.
சரத்குமார் - அசோக் செல்வன் காம்போ!
இதனிடையே சீரியல் கொலைகளின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகரிக்க, மறுபுறம் போலீசாரிடையேயான இன்னர் பாலிடிக்ஸ் முற்றுகிறது. இவற்றை எல்லாம் தாண்டி, படு க்ளீனாக கொலை செய்யும் சீரியல் கில்லர் தொடர்பான மர்ம முடிச்சுகளை சரத்குமார்- அசோக் செல்வன் இணை எவ்வாறு அவிழ்க்கின்றனர், சீரியல் கொலையாளி யார், அவன் பின்னணி என்ன என்பதை விறுவிறு சைக்காலஜிக்கல் த்ரில்லராக சொல்லி இருக்கும் திரைப்படம் தான் ‘போர் தொழில்’.
முதலில் சரத்குமார் - அசோக் செல்வன் இணையை இந்தப் படத்துக்கு தேர்ந்தெடுத்த புதுமுக இயக்குநர் விக்னேஷ் ராஜாவுக்கு பாராட்டுகள்! எழுத்தாளர்கள் சுஜாதா, ராஜேஷ் குமார் ஆகியோரின் ‘கணேஷ் - வசந்த்’ ’விவேக் - விஷ்ணு’ கதாபாத்திரங்கள், புகழ்பெற்ற ஷெர்லாக் ஹோம்ஸ் - ஜான் வாட்சன் கதாபாத்திரங்கள் ஆகிய இணையரைப் போன்று, சரத்குமார் - அசோக் செல்வன் இருவரையும் கோலிவுட்டின் வெற்றிகர இணையாக மாற்றி திரையில் உலவ விட்டிருக்கிறார்.
நடிப்பு
‘இத தெரிஞ்சிக்கிட்டு என்ன பண்ண போற..’ எனும் ரேஞ்சில் ஆஜானுபாகுவாக தோன்றி, அனைத்து ஆஃபிஸர்களிடமும் கடுப்படிக்கும் சரத்குமார் கனக் கச்சிதம்! அசோக் செல்வனிடம் விறைப்பு காட்டுவது, அவரது சாதுர்யத்தை ஒரு கட்டத்தில் ரசிப்பது, சைக்கோ கில்லருக்கு பாவம் பார்க்க மறுப்பது, உணர்ச்சிவசப்படுவது என ‘தன் பாணி’ நடிப்பால் இப்பாத்திரத்தில் அநாயாசமாக ஸ்கோர் செய்கிறார்.
ரொமாண்டிக் காமெடி படங்களில் லைக்ஸ் அள்ளி வந்த அசோக் செல்வனுக்கு இதில் சற்று வித்தியாசமான கதாபாத்திரம். பேசத் தெரியாமல் உளறிக்கொட்டினாலும் பணியில் கெட்டியாக வலம் வருவது, ஏதாவது செய்து சரத்குமாரை இம்ப்ரெஸ் செய்துவிடத் துடிப்பது, கள அறிவு இல்லாமல் புத்தக அறிவை உபயோகித்து மாஸ் காட்டுவது என அசோக் செல்வன் ஜாலியாக நம்மை படத்துடன் ஒன்ற வைக்கிறார். திரை உலகில் 10ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் அசோக் செல்வனுக்கு இது ஒரு முக்கியமான படமாக அமையும்.
கோலிவுட் க்ரைம் த்ரில்லர் படங்களில் ஹீரோயின்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் பாத்திரத்தில் நடிகை நிகிலா விமல். அழுத்தமற்ற கதாபாத்திரத்தில் கதைக்கு தேவையானதை செய்கிறார்.
திக் திக் காட்சிகள்...
திருச்சி அதனைச் சுற்றியுள்ள காடுகளில் அரங்கேறும் கொலைகள் என முதல் பாதி தடதடக்கிறது. ஆல் டைம் கொரிய சினிமா சீரியல் கில்லர் க்ளாசிக்கான ‘மெமரீஸ் ஆஃப் மர்டர்’ படத்தை முதல் பாதி ஆங்காங்கே நியாகப்படுத்தினாலும், நம்மை சீட்டின் நுனியில் அமரவைத்து படம் விறுவிறுவென பயணிக்கிறது.
‘அய்யப்பனும் கோஷியும்’ மூலம் கவனம் ஈர்த்த ஜேக்ஸ் பிஜாயின் இசை இந்த படத்துக்கு வலுசேர்த்து சஸ்பென்ஸைக் கூட்டுகிறது. கலைசெல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவு இரவு நேரக் காட்சிகளில் அச்சத்தைக் கூட்டி கதைக்கு வலுவூட்டுகிறது.
தேடப்படும் சீரியல் கில்லரை காண்பித்துவிட்ட பிறகும் விறுவிறுப்பாக நகரும் இரண்டாம் பாதி அசத்தல். ஆனால் ‘வேட்டையாடு விளையாடு’, ‘ராட்சசன்’ தொடங்கி பிற மொழி படங்கள், சீரிஸ்கள் வரை சீரியல் கில்லர் கதைகளில் நாம் பார்த்துள்ள ஊகிக்க முடியும் க்ளிஷே காட்சிகளும் இடம்பெறவே செய்கின்றன.
க்ரைம் த்ரில்லர் ரசிகர்களுக்கு விருந்து!
முந்தைய சில தமிழ் படங்களின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை கவனமாகக் கொண்டு, சீரியல் கொலையாளியின் பின்னணி கதையை சரியாகவும் வலுவாகவும் கையாண்டிருக்கிறார்கள்.
“பயப்படுறவன் கோழை இல்ல, பயந்து ஓடுபவன் தான் கோழை”, “உங்க வேலையை சரியா செஞ்சா எங்க வேலை குறையும்” எனும் போலிஸ் தரப்பு கோரிக்கை போன்ற இடங்களில் வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன.
மொத்தத்தில் தமிழ் சினிமாவில் ஒரு தரமான சீரியல் கில்லர் படத்தை வழங்கி, க்ரைம் த்ரில்லர் ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து வைத்து, முதல் படத்திலேயே கவனம் ஈர்த்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் ராஜா... படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் எடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வாழ்த்துகள்!