தமிழக அளவில் மஞ்சப்பை விருதில் முதல் இடம் பெற்ற தனியார் கல்லூரிக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் சட்டப்பேரவையில் 2023 ஆம் நிதி ஆண்டுக்கான அறிவித்தார். இதில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் தடையை திறம்பட செயல்படுத்தி தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும், சிறந்த பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்காக சிறந்த பள்ளிகள் 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் மூன்று சிறந்த வணிக வளாகங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு, முதல் பரிசாக ரூபாய் 10 லட்சமும், இரண்டாம் பரிசாக 5 இலட்சமும், மூன்றாம் பரிசாக மூன்று லட்சமும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் மீண்டும் மஞ்சப்பைத் திட்டத்தை தங்களது கல்லூரி மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், கல்லூரி வளாகம் மற்றும் சுற்றுப்புறத்தை பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாமல் தூய்மையாக பராமரித்து வந்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் தருமபுரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள், பிரசித்தி பெற்ற கோவில்கள், பேரூராட்சிகள், பள்ளி, கல்லூரிகள் என பல்வேறு இடங்களில் 5000 மஞ்சப்பைகளை விநியோகம் செய்து, பொதுமக்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்துள்ளனர். இதனால் தருமபுரி தனியார் பாலிடெக்னிக் கல்லூரி தமிழக அரசின் மஞ்சப்பை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் தருமபுரி கல்லூரிக்கு முதல் பரிசும், காசோலை பத்து லட்சத்தினை, தாளாளர் கோவிந்தனுக்கு வழங்கி பாராட்டினர். தொடர்ந்து மாநில அளவில் முதல் பரிசை வென்று வந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளர் கோவிந்தன், பாராட்டு சான்றிதழ் மற்றும் காசோலையை தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தியிடம் வழங்கி வாழ்த்துக்களை பெற்றார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் சாந்தி, இலக்கியம்பட்டி ஏரி பகுதியை பராமரித்து சிறுவர் பூங்கா உள்ளிட்டவற்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதை பராமரிக்கும் பணியினை மேற்கொள்ளுமாறு கல்லூரி தாளாளருக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் பசுமை ஆசிரியர் சங்கர், பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் மகேந்திரன், மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் லாவண்யா மற்றும் அலுவலர்கள் தங்கதுரை மற்றும் வேதமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.