தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நடிகையாக உலா வந்தவர் நடிகை ஜோதிகா. ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், மாதவன், சிம்பு என பெரிய முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்துள்ள ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவை விட்டு விலகியிருந்தார்.


ஜோதிகா தந்த விளக்கம்:


பின்னர், 36 வயதினிலே படத்திற்கு பிறகு மீண்டும் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில், திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜோதிகாவிடம் தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் ஏன் வாக்களிக்கவில்லை? என்று கேள்வி எழுப்பப்பட்டது.


அப்போது, அதற்கு பதிலளித்த ஜோதிகா சில தனிப்பட்ட காரணங்களால் வாக்களிக்க இயலவில்லை என்றும், சில காரணங்களால் வெளியூரில் இருந்ததாகவும் பதிலளித்தார். ஆனால், அவர் பதிலளிக்கும்போது ஒவ்வொரு வருடமும் தான் தவறாமல் வாக்களிப்பதாக கூறினார்.


ஆன்லைன் வாக்கு:


பின்னர், அவரது பதிலால் அதிர்ச்சியடைந்த நிருபர்கள் 5 ஆண்டுக்கு ஒரு முறை என்று கூறவும், மன்னிக்கவும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்களிக்கிறேன் என்று கூறினார். பின்னர், தான் வாக்களிக்காததற்கு காரணம் கூற முயன்ற ஜோதிகா அதுதான் இப்போது ஆன்லைன் வாக்கு வந்துவிட்டதே என்று கூறினார்.


இந்தியாவைப் பொறுத்தவரை குடியரசுத் தலைவரோ, பிரதமரோ, ஆளுநரோ, முதலமைச்சரோ யாராக இருந்தாலும் நேரில் சென்றுதான் வாக்களிக்க வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் தேர்தல் அதிகாரிகள், அரசு பணியாளர்கள் மட்டுமே தபால் வாக்குகள் செலுத்த அனுமதி அளிக்கப்படும். குறிப்பிட்ட வயதுள்ள முதியவர்களுக்கு மட்டும் தபால் வாக்குகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்றபடி, எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும் குறிப்பிட்ட வயதிற்கு கீழே இருப்பவர்கள் கண்டிப்பாக வாக்குச்சாவடி மையத்திற்கு நேரில் சென்றுதான் வாக்களிக்க வேண்டும் என்பது விதி. இது அனைவரும் சமம் என்பதை உணர்த்துவதற்காகவே இவ்வாறு நடத்தப்படுகிறது.


கேலி செய்த சுமந்த் சி ராமன்:


இந்த நிலையில், ஜோதிகா இணையதளம் மூலம் வாக்கு செலுத்தலாம் என்று கூறியிருப்பது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜோதிகாவின் பேச்சை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன், இணையதளத்தில் வாக்களிக்க முடியும் என்பது எனக்குத் தெரியாது. வாக்குச்சாவடிக்குச் சென்று ஓட்டுப் போட வரிசையில் நின்று எனது நேரத்தை வீணடித்து விட்டேன் என்று கேலியாக பதிவிட்டுள்ளார்.


அவரது பதிவிற்கு கீழே பலரும் ஜோதிகா பேச்சு குறித்தும், அவரது பதிவு குறித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் திரைப்படங்களில் அறிவுரைகள் கூறுவதற்கு முன்பு அதை பின்பற்றுங்கள் என்றும், சிலர் ஜோதிகா சமூக வலைதளங்களில் போடப்படும் வாக்கெடுப்பை ஓட்டு என்று நினைத்துவிட்டார் என்றும், வெயிலில் நின்று வாக்களிக்கும் சாமானியர்களை பார்த்தால் எப்படி தெரிகிறது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.


மேலும் படிக்க: Actress Jyothika: மக்களவைத் தேர்தலில் ஏன் ஓட்டுப்போடவில்லை? நடிகை ஜோதிகா சொன்ன காரணம்!


மேலும் படிக்க: ஆஹா என்ன வரிகள் 12: காத்திருப்பின் வலியைச் சொல்லும் "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி"