தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோயினாக உலா வந்தவர் நடிகை ஜோதிகா. விஜய், அஜித், சூர்யா, விக்ரம், ரஜினி, கமல் எனப் பலருடனும் நடித்துள்ளார். சூர்யாவை திருமணம் செய்த பிறகு சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்த ஜோதிகா, கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் நடித்து வருகிறார்.


ஏன் வாக்களிக்கவில்லை?


இந்த நிலையில், ஜோதிகா திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவரிடம் நிருபர் ஒருவர் தேர்தலுக்கு வாக்களிக்காதது பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜோதிகா, “நான் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிப்பேன். சில நேரங்களில் வேலை காரணமாக வெளியூர்களில் இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. சில தனிப்பட்ட காரணங்களால் ஊரில் இருக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. அதுபோன்ற காரணங்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டியதாக உள்ளது” என்று பதிலளித்தார்.


பின்னர், அவரிடம் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதிலளித்த ஜோதிகா “என்னிடம் அரசியலுக்கு வாருங்கள் என்று யாரும் கேட்கவில்லை. இப்போதைக்கு அந்தத் திட்டமும் இல்லை. எனது 2 குழந்தைகளும் படிக்கிறார்கள். அவர்களுக்கு தேர்வு வருகிறது. அதையும் வேலையையும் பார்க்க வேண்டியது உள்ளது. அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை” என்றார்.


சுயநலமாக இருக்க வேண்டும்:


மேலும், “பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நிறைய கூறியுள்ளேன். பெண்கள் சற்று சுயநலமாக இருக்க வேண்டும். உங்களை நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். திருமணத்திற்கு பிறகு நீங்கள்தான் குடும்பத்திற்கு முதுகெலும்பு. ஆனாலும், உங்களுக்காக நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். 45 நிமிடங்களாவது உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டும். நான் திருமணத்திற்கு பிறகு ஆரோக்கியமாக இருக்க நிறைய செய்துள்ளேன்.


நான் சினிமாவில் மீண்டும் நடிக்க வந்த பிறகு நிறைய புதுமுக இயக்குநர்களுடன் பணியாற்றியுள்ளேன். புதுமுக இயக்குநர்கள் அருமையாகப் பணியாற்றுகிறார்கள். அவர்கள் புதியதாக சிந்திக்கிறார்கள். சூர்யாவுடன் மீண்டும் நடிப்பதற்கு ஏற்ப கதை இருந்தால் நடிப்பேன். அதுபோன்ற கதைக்காக 10 ஆண்டுகளாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” இவ்வாறு அவர் பேசினார்.


முதன்முதலில் இந்தி படம் மூலம் திரையுலகில் அறிமுகமான ஜோதிகா, தமிழில் வாலி என்ற படம் மூலமாக அறிமுகமானார். ஜோதிகா நடிப்பில் தற்போது இந்தியில் டப்பா கார்டெல் என்ற படம் உருவாகி வருகிறது. இவரது நடிப்பில் கடைசியாக சைத்தான் என்ற படம் இந்தியில் வெளியானது. தமிழில், சசிகுமாருடன் இணைந்து உடன்பிறப்பே என்ற படம் வெளியாகியது. மலையாளத்தில் மம்மூட்டியுடன் காதல் தி கோர் என்ற படம் வெளியானது.


மேலும் படிக்க: Manobala: மனோபாலா மறைவிற்கு பிறகு ரிலீசான அவரது படங்கள் இத்தனையா? லிஸ்ட்டை பாருங்க!


மேலும் படிக்க: Aranmanai 4: பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற “அரண்மனை 4” : தியேட்டருக்கு படையெடுக்கும் ரசிகர்கள்!