அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜர் ஆகாத திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த 2016 -ஆம் ஆண்டு இயக்குநர் ஆர்.கே.செல்வமணி மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அருள் அன்பரசு ஆகியோர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்திருந்தனர். அந்தப் பேட்டியில், பிரபல சினிமா ஃபைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். இதனால் போத்ரா இவர்கள் மீது  சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.


சினிமா ஃபைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா மறைவுக்குப் பின்னர், அவருடைய மகன் இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்த வழக்கு  தொடர்பான விசாரணை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.


அப்போது, வழக்கு விசாரணைக்கு ஆர்.கே.செல்வமணியோ, அவரது தரப்பு வழக்கறிஞரோ ஆஜராகவில்லை. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆர்.கே.செல்வணிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. மேலும் விசாரணையை செப்டம்பர் 22- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. 


தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்த ஆர்.கே.செல்வமணி தற்போது தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான பெப்சியின் தலைவராக பதவி வகித்து வருகிறார்.   நடிகை ரோஜாவும், ஆர்.கே. செவமணியும் காதலித்து,  கடந்த 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர் .அவரது மனைவி ரோஜா, ஆந்திர மாநிலத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் எம்.எல்.ஏ.வாக இருப்பதோடு, அம்மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.    


தமிழ் திரையுலகில் பல்வேறு துறைகள் உள்ளன. இவற்றின் கூட்டு முயற்சியால் தான் திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் உள்ள 24 துறையும் சேர்த்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சம்மேளனத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது.  தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத்தின் 2023-2026 ஆண்டுக்கான தேர்தல்  நடைபெறுவதாக அறிக்கப்பட்டிருந்த நிலையில், தலைவர் பதவிக்கு ஆர்.கே செல்வமணியை தவிர யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் ஆ.கே.செல்வமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க 


US Flight Crash: கூட்டுப்பயிற்சியின் போது விமானம் நொறுங்கி 3 அமெரிக்க கடற்படை வீரர்கள் உயிரிழப்பு.. ஆஸ்திரேலியாவில் நடந்த சோகம்..


Coimbatore: கோவை மேயர் கல்பனா மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்.. பாதுகாப்பு வழங்க கோரி இளம்பெண் கோரிக்கை..!