உலகில் இருக்கும் அனைத்து நாடுகளும்  ராணுவ கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில், அமெரிக்கா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், கிழக்கு திமோர் ஆகிய நாடுகளுடன் இணைந்து ஆஸ்திரேலியா கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் உள்ள கடற்கரை அருகே இந்த பயிற்சி நடைபெற்றது. இந்தக் கூட்டு பயிற்சியில் சுமார் 2500 ராணுவ வீரர்கள் கலந்துக்கொண்டனர். அப்போது பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதில் ஒரு பகுதியாக அப்போது அமெரிக்காவுக்கு சொந்தமான பெல் போயிங் வி-22 ஆஸ்ப்ரே என்ற விமானம் திவி தீவு நோக்கி பயணித்தது. அதில் 23 அமரிக்க கடற்படை வீரர்கள் இருந்தனர்.


ஆஸ்திரேலியாவில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் மெல்வில் தீவு அருகே சென்ற போது, அந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதனை அறிந்த மீட்பு குழுவினர் உடனடியாக மெல்வில் தீவுக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த விமானம் சுக்குநூறாக நொறுங்கி தரையில் விழுந்ததை கண்டு அதிர்ந்து போனர். இந்த விபத்தில் காயமடைந்த கடற்படை வீரர்களை உடனடியாக மீட்பு குழுவினர் அங்கிருந்து விமானம் மூலம் அருகில் இருக்கும் டார்வின் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் இந்த விபத்தில் 3 அமெரிக்க ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீரர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






இந்த சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி ஆல்பனீஸ், உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், “ ராணுவ கூட்டுப்பயிற்சியின் போது விமானம் விபத்துக்குள்ளாகி துரதிஷ்டவசமாக 3 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இதில் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அரசாங்கம் உறுதியாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.


இந்த விபத்தினை தொடர்ந்து ராணுவ கூட்டுப்பயிற்சியானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.