நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.






இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. அதில், “ஜேசன் சஞ்சயை இயக்குனராக அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, லைகா நிறுவன தலைவர் சுபாஸ்கரனை சந்திப்பது, புதிய படம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது போன்ற புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. முன்னதாக லைகா நிறுவனம் வெளியிட்ட மற்றொரு டிவிட்டர் பதிவில் “லயன் கிங்ஸ் படத்தில் முஃபாசாவின் காலடி தடத்தை பின்பற்றி சிம்பா அறிமுகமாவதை” போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது. அஜித்தின் விடாமுயற்சி தொடர்பான அப்டேட்டை லைகா நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜேசன் சஞ்சய் இயக்குனர் ஆவது குறித்து லைகா நிறுவனம் அப்டேட் வெளியிட்டுள்ளது.


லைகா நிறுவனம்: 


லைகா நிறுவனம் தமிழில் தவிர்க்க முடியாத ஒரு தயாரிப்பு நிறுவனமாக உள்ளது. தமிழின் முன்னணி நடிகர்களை வைத்து தொடர்ந்து பல்வேறு பிரமாண்ட படங்களை தயாரித்து வருகிறது. நடிகர் விஜய் நடிப்பில் உருவான கத்தி படத்தை தயாரித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தனது தயாரிப்புப் பணியைத் லைகா நிறுவனம் தொடங்கியது. தொடர்ந்து பல படங்களைத் தயாரித்த இந்நிறுவனம் ரஜினி காந்த் நடிப்பில் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தை இயக்கியது. அண்மையில் அந்நிறுவன தயாரிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் பார்ட் 1 மற்றும் பார்ட் 2 இரண்டு படங்களும் பெரும் வெற்றி பெற்றது.


புதிய நட்சத்திரங்கள்:


இந்நிலையில் தான், ஜேசன் சஞ்சயை இயக்குனராக அறிமுகப்படுத்த உள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள அந்நிறுவன தலைவர் சுபாஸ்கரன் “ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் இருப்பார்கள், மேலும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க தொழில்துறையைச் சேர்ந்த சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என செய்திக் குறிப்பில் தெரிவித்திருக்கிறார்.


ஜேசன் சஞ்சய்:


கடந்த 2009ம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்தில், ஒரு பாடலில் மட்டும் தோன்றி இருந்தார். தொடர்ந்து, நடிப்பில் ஆர்வம் காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படிப்பிற்காக வெளிநாடு சென்றார். தொடர்ந்து குறும்படங்களை இயக்க தொடங்கினார். இதனிடையே, பிரேமம் இயக்குநர் அல்போன்சு புத்திரன், ஜேசன் சஞ்சையை நாயகனாக வைத்து புதிய படம் தயாரிக்க கதை சொல்லியிருந்தார். ஆனாலும், அவர் நடிப்பில் ஆர்வம் காட்டாமல், லைகா நிறுவனம் மூலம் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.