நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது தாமிரபரணி ஆறு. வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியில் குளித்து மகிழ மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளனமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.


தாமிரபரணி ஆறு:


குறிப்பாக வார விடுமுறை நாளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகளவில் காணப்படும். காவல்துறையினரும் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் அம்பாசமுத்திரம் அருகே உள்ளது சின்ன சங்கரன்கோவில்.


இங்குள்ள  தாமிரபரணி ஆற்றில் பல்வேறு பகுதியில் இருந்தும் வந்து குளித்துவிட்டு செல்வர். குறிப்பாக விடுமுறை தினங்களில் கூட்டம் அதிகளவில் இருக்கும்.. இந்த சூழலில் நேற்று விடுமுறை நாள் என்பதால் பல்வேறு ஊர்களில் இருந்தும் தாமிரபரணி ஆற்றிற்கு குளிக்க வந்திருந்தனர், குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் விஸ்வபுரம் பகுதியை சேர்ந்த பால முருகன் என்பவரது மகன் சுரேஷ் (23) தன்னுடன் பணியாற்றும் ஊழியர்கள் சுமார் 20 பேருடன் ஆற்றுக்கு குளிக்க வந்துள்ளார்.


இளைஞர் மாயம்:


அப்போது அனைவரும் குளித்துக்கொண்டிருந்த போது சுரேஷ் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது திடீரென ஆற்றில் மூழ்கிய நிலையில் மாயமாகியுள்ளார். உடன் வந்தவர்கள் குளித்துக் கொண்டிருந்தவர்கள் என அனைவரும் மாயமான சுரேஷை தேடி உள்ளனர். எங்கும் அவர் கிடைக்காத நிலையில் காவல்துறையினர் மற்றும் அம்பை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.


தகவலறிந்த அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குறிப்பாக அம்பை தீயணைப்பு நிலைய அலுவலர் பலவேசம் தலைமையிலான தீயணைப்பு துறையினர் ஆற்றில் மூழ்கிய சுரேசை தீவிரமாக தேடி வந்தனர். இரவு நேரமானதால் நீண்ட  நேர தேடுதலுக்கு பின்னும் சுரேஷ் கிடைக்காத  நிலையில் வீடு திரும்பினர். தொடர்ந்து இன்று அதிகாலை முதல் இரண்டாவது நாளாக மீண்டும் சுரேஷை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் மூழ்கியவரை இன்னும் மீட்காத நிலையில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.


தொடர் உயிரிழப்புகள்:


இதனால் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கடந்த 2 மாதத்தில் அம்பை, பாபநாசம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் சுமார் 6 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தாமிரபரணி ஆற்றில் குளிக்க செல்பவர்களுக்கு ஆழமான பகுதி குறித்த விழிப்புணர்வு இல்லாததாலும், அதிகாரிகள் அது குறித்த அறிவிப்பு பலகை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது.


எனவே தொடர் உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.  தன்னுடன் பணியாற்றும் ஊழியர்களுடன் ஆற்றில் குளிக்க வந்த வாலிபர் மாயமான சம்பவம் ஊழியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்..


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண