செஃப் தாமுவை குறிப்பிட்டு  வெங்கடேஷ் பட் வெளியிட்டுள்ள ட்வீட்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




குக் வித் கோமாளி


குக் வித் கோமாளி 5 ஆவது சீசன் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்களுக்கு ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கொடுத்து வருகிறார்கள் இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக செஃப் வெங்கடேஷ் பட் தெரிவித்தார். அவரைத் தொடன்ர்து செஃப் தாமுவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து தான் விலகுவதாக வீடியோ வெளியிட்டார். மேலும் இருவரையும் இணைந்து புது நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இந்த நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்களுக்கு பிடித்த நிகழ்ச்சியில் இருந்த இரண்டு நடுவர்களும் விலகிவிட்டதை நினைத்து ரசிகர்கள் ஒரு பக்கம் வருத்தமடைந்தார்கள் என்றாலும் இந்த புது நிகழ்ச்சி பற்றிய எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்து வருகிறது. முன்னதாக சன் தொலைக்காட்சியில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத நிலையில் இந்த நிகழ்ச்சி நிச்சயம் புது ஐடியாவாக இருக்கும் என் ரசிகர்கள் கருதினார்கள்.


மீண்டும் ஷாக் கொடுத்த தாமு - வெங்கடேஷ்



இப்படியான நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து தான் விலகுவதாக வெளியிட்ட வீடியோவை நீக்கியுள்ளார் செஃப் தாமு. இதனைத் தொடர்ந்து செஃப் வெங்கடேஷ் பட் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. செஃப் தாமு தனது வீடியோவை நீக்கியது குறித்து  தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெங்கடேஷ் பட் “ பூனை கண் மூடிற்றால் உலகம் இருண்டு விடுமோ......... இணையத்தில் பதிவை நீக்கினால் உறைத்தது மறையுமோ.....இதனால் உமக்கு கிடைப்பது எதுவாயினும்.....மகிழ்ச்சி என்றும் எனக்கே......சொல் தவறினாலும் நட்பு மாறாது.....” என்று பதிவிட்டுள்ளார். செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இடையில் ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டிருக்குமோ என்கிற கேள்வி எழுந்துள்ளது.


அடுத்தடுத்த பரபரப்பை ஏற்படுத்து வகையிலான பதிவுகளை இருவரும் தொடர்ந்து வருகிறார்கள். ஒருவேளை இவை எல்லாம் அடுத்து வர இருக்கும் ஷோவிற்கான ப்ரோமோஷனுக்காக நடத்தப்படும் நாடகங்களாக இருக்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். நாளை மார்ச் 3 ஆம் தேதி இந்த புதிய ஷோ குறித்தான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.