PM Modi: மேற்குவங்கத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, I.N.D.I.A. கூட்டணி தலைவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.


மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி:


மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தின் ஆரம்பாக் பகுதியில் ரூ.7,200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினார். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ரூ.2,790 கோடி மதிப்பிலான  518 கிமீ தூரத்திற்கான ஹால்தியா-பரௌனி கச்சா எண்ணெய் குழாய்  திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இந்த பைப்லைன் ஆனது பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் வழியாக, பராவ்னி, போங்கைகான் மற்றும் கவுஹாத்தி ஆகிய சுத்திகரிப்பு ஆலைகளுக்கு குறைந்த செலவிலும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான முறையிலும் கச்சா எண்ணெயை கொண்டு செல்வதற்கு உதவுகிறது.


மம்தா பானர்ஜியை கடுமையாக சாடிய மோடி:


திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, “சந்தேஷ்காலியின் சகோதரிகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் செய்ததை நாடே பார்க்கிறது. நாடு முழுவதும் கோபத்தில் உள்ளது. சந்தேஷ்காலியில் நடந்த சம்பவத்தால் ராஜா ராம் மோகன் ராயின் ஆன்மா வேதனை அடைந்திருக்க வேண்டும். ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்க மக்களுக்கு துரோகம் செய்துள்ளது. மக்கள் உரத்த குரலில் பேசுகிறார்கள்.  அவர்களுக்கு பாஜக வேண்டும். சந்தேஷ்காலியில் பெண்களுக்கு எதிரான அட்டூழியங்களை விட சிலரின் வாக்கு முக்கியமா என்று மேற்கு வங்காள மக்கள் தங்கள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை  கேட்கிறார்கள்.






I.N.D.I.A. கூட்டணி கட்சி தலைவர்கள் மீது பாய்ச்சல்:


  I.N.D.I.A. கூட்டணியின் உயரிய தலைவர்கள் அனைவரும் சந்தேஷ்காலி சம்பவத்தில் அமைதியாக இருந்தனர். காந்தியின் மூன்று குரங்குகளைப் போல இந்திய அணித் தலைவர்கள் தங்கள் கண்களையும், காதுகளையும், வாயையும் மூடிக் கொண்டுள்ளனர் . அவர்கள் பாட்னா, பெங்களூரு, மும்பை மற்றும் எங்கும் கூட்டங்களை நடத்துகிறார்கள். ஆனால் காங்கிரஸுக்கும் இடதுசாரிகளுக்கும் வங்காளத்தில் திரிணாமுல் அரசைக் கேள்வி கேட்க தைரியம் இல்லை. அவர்கள் சந்தேஷ்காலியின் பக்கம் முகத்தைத் கூட திருப்பவில்லை.


இது வங்காளத்திற்கும், அதன் கலாச்சாரத்திற்கும், பாரம்பரியத்திற்கும் அவமானம் இல்லையா? இதுதான் இந்தியக் கூட்டத்தின் உண்மை. அவர்கள் ஊழல்வாதிகள், குடும்ப மற்றும் சமாதான அரசியலில் நம்பிக்கை கொண்டவர்களைக் காப்பாற்றுகிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் ஊழலின் புதிய மாதிரியை அமைத்துள்ளது. அந்த கட்சி தலைவர்களின் வீடுகளில் கண்டெடுக்கப்பட்ட நோட்டுக் கட்டுகளைப் பார்த்தீர்களா? சினிமாவில் கூட இவ்வளவு பணத்தைப் பார்த்திருக்கமாட்டீர்கள்” என பேசியுள்ளார். முன்னதாக, பாஜக ஆட்சி அமைந்த பிறகு முன்னெடுக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும் பிரதமர் மோடி பட்டியலிட்டு பேசியது குறிப்பிடத்தகக்து.