லியோ பட ட்ரெய்லரில் நடிகர் விஜய் கெட்ட வார்த்தை பேசியதை கண்டித்து இந்து மக்கள் கழகம் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் விஜய் நடிப்பில் அடுத்ததாக “லியோ” படம் வெளியாகவுள்ளது. மாஸ்டர் படத்துக்குப் பின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக அவர் நடித்துள்ளார்.  லியோ படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படம் ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு வரும் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இந்திய சினிமாவின் மிக முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


அதன்படி த்ரிஷா,அர்ஜூன், மிஷ்கின், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, ப்ரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன், சஞ்சய் தத், அபிராமி வெங்கடாச்சலம், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன், அனுராக் காஷ்யப் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளது. இந்த படத்தின் பாடல்கள், போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் வீடியோக்கள்  வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதற்கிடையில் நேற்று முன்தினம் ஒட்டுமொத்த திரையுலகமும் எதிர்பார்த்த லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. 


சற்றும் எதிர்பாராத விதமாக ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளோடு இருக்கும் இப்படி ஒரு படத்தை இளைஞர்கள் கொண்டாடுவார்கள் என்பது நிதர்சனம். ஆனால் பேமிலி ஆடியன்ஸை அதிகளவில் கொண்டுள்ள விஜய், எப்படி இப்படி முழுக்க முழுக்க வன்முறை காட்சிகள் நிறைந்த படத்தில் நடித்தார் என்ற கேள்வி எழுந்தது. அதுமட்டுமல்லாமல் இந்த ட்ரெய்லரில் விஜய் ஒரு காட்சியில் கெட்ட வார்த்தை பேசும் காட்சியும் இருந்தது. இதைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். லியோ படத்துக்கு எதிராக கண்டனங்கள் குவியத் தொடங்கியுள்ளது. 


நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோரை சரமாரியாக வழக்கம்போல சிலர் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள் களம் கண்டுள்ளதால் சமூக வலைத்தளங்களில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. படத்தில் கெட்டவார்த்தை மற்றும் சில காட்சிகள் இருக்காது என்றாலும் ட்ரெய்லரில் இருந்தது பலரையும் முகம் சுழிக்க வைத்திருந்தது. இந்நிலையில் லியோ படக்குழு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 


அதில், “ பட டிரெய்லரில் இடம்பெற்ற ஆபாச வார்த்தையை நீக்கக்கோரியும், டிரெய்லரை தணிக்கை செய்யாமல் யூடியூபில் வெளியிட்ட படக்குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும்  நடிகர் விஜய் ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக செயல்படாமல் ஆபாச வார்த்தையை பயன்படுத்தினால் நிஜ வாழ்க்கையில் எதிரொலிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 




மேலும் படிக்க: Leo Trailer: சர்ச்சையை கிளப்பிய லியோ ட்ரெய்லர்.. குவியும் கண்டனங்கள்.. விஜய் கொடுத்த ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?