லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரெய்லர் பார்த்ததும் விஜய் என்ன சொன்னார் என்பது குறித்த தகவலை தயாரிப்பாளர் லலித் குமார் வெளிப்படுத்தியுள்ளார். 


லியோவுக்காக கூடிய கூட்டம் 


மாஸ்டர் படத்துக்குப் பின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் “லியோ”. இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். லியோ படமானது ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் த்ரிஷா,அர்ஜூன், மிஷ்கின், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, ப்ரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன், சஞ்சய் தத், அபிராமி வெங்கடாச்சலம், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன், அனுராக் காஷ்யப் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளது. 


ஏற்கனவே படத்தின் பாடல்கள், பல போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 30 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நேரு உள்விளையாட்டரங்களில் நடைபெறுவதாக இருந்த நிகழ்ச்சிக்கு அதிகப்படியான பாஸ் கோரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படலாம் என கருதிய தயாரிப்பு நிறுவனம் நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தது. இப்படியான நிலையில் ரிலீசுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த லியோ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. 


ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளோடு, விஜய் பேசும் கெட்டவார்த்தையும் இந்த ட்ரெய்லரை அனைவரும் என்ன தான் இருக்கிறது என பார்க்க வைத்துள்ளது. படத்திற்கு வழக்கம்போல எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. முன்னணி நடிகர் ஒருவர் இப்படி தரக்குறைவாக வார்த்தை பேசி தனது ரசிகர்களின் தவறான எண்ணத்தை ஏற்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இதனால் சமூக வலைத்தளங்களில் லியோ ட்ரெய்லர் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. 


விஜய் என்ன சொன்னார்?


இந்நிலையில் லியோ பட ட்ரெய்லர் பார்த்துவிட்டு நடிகர் விஜய் என்ன சொன்னார் என்பதை தயாரிப்பாளர் லலித்குமார் பகிர்ந்துள்ளதாக ஆடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அதில், “ கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 1) நானும், லோகேஷ் கனகராஜூம் எடிட் அறையில் இருந்தோம். அன்னைக்கு தான் ட்ரெய்லரோட இறுதி வடிவம் ரெடியானது. அப்போது எனக்கு விஜய் சார் போன் பண்ணாரு. எங்க இருக்கீங்க என கேட்கவும், நான் எடிட்ல இருக்கேன் என சொன்னேன். என்ன பண்றாங்க என அவர் கேட்கவும், நான் ட்ரெய்லர் ரெடியாகியிருக்கு, ரொம்ப நல்லா வந்துருக்குன்னு சொன்னேன்.


அதன்பிறகு அடுத்த நாள் (அக்டோபர் 2) காலையில விஜய் சார் ட்ரெய்லர் பார்த்தாரு. அவருக்கு ரொம்ப பிடிச்சி போச்சு. விஜய்கிட்ட அதை வெளிப்படையா பார்க்க முடியாது என்பதே உண்மை. ஓகே..ஓகே.. என சொல்லிவிட்டு சென்றார். மேலும் இந்த படத்துக்காக லோகேஷ் அவ்வளவு கஷ்டப்பட்டார். முதல் நாள் ஷூட்டிங்கிற்காக காஷ்மீர் சென்றபோது ஷூட்டிங் போவாமா என கேட்டார். ஏனென்றால் அன்றைக்கு மைனஸ் 22 டிகிரி குளிர். எங்கு பார்த்தாலும் ஐஸ்கட்டி மட்டும் தான். 51 நாள் ஷூட்டிங் நடந்துச்சு. முதல் நாள் முதல் காட்சி கோவிலில் தான் ஷூட்டிங் நடந்தது.  நல்லப்படியா ஷூட்டிங் நடக்க வேண்டும் என வேண்டிக்கொண்டேன். டெக்னீசியன்கள் தொடங்கி பாத்திரம் கழுவும் பணியாள் வரை அத்தனை பேரும் பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைச்சிருக்கு என தயாரிப்பாளர் லலித் அந்த ஆடியோவில் கூறியுள்ளார்.