பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஜோவிகா விஜயகுமார், படிப்பு பற்றி நடிகை விசித்ராவிடம் வாக்குவாதம் செய்தது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 


முதல் நாள் போட்டியாளர்கள் தங்களை அறிமுகம் செய்துக் கொண்டனர். அப்போது பேசிய ஜோவிகா,  தனக்கு படிப்பு வரவில்லை. அதனால் 9ஆம் வகுப்புக்கு மேலே பள்ளி செல்லவில்லை. நடிப்பில் ஆர்வம் இருந்ததால் அதுதொடர்பான படிப்புகளை கற்று வருகிறேன் என கூறியிருந்தார். மேலும் என் படிப்பு தொடர்பாக யாரும் பேச வேண்டாம் என கேட்டுக் கொண்டார். ஆனால் 12 ஆம் வகுப்பு வரையிலான அடிப்படை கல்வி அவசியம் என விசித்ரா தன் கருத்தை கூற அதை பெரிய அளவில் ஜோவிகா கண்டுக்கொள்ளவே இல்லை. தொடர்ந்து போட்டியாளர்களிடம் ஜோவிகா படிக்காமல் போனது குறித்தும் பேசியிருந்தார். 


இப்படியான நிலையில் 5வது நாளான நேற்று போட்டியாளர்கள் தங்களின் சக போட்டியாளர்களிடம் மாற்றிக் கொள்ள வேண்டிய விஷயத்தை சொல்வது தொடர்பான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அப்போது ஜோவிகா, நான் முதல் என் படிப்பு விஷயத்தைப் பற்றி சொன்னேன். அது முடிந்து போன விஷயம். எனக்கு 19 வயது ஆகி விட்டது, நான் வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்துக்கு வந்துவிட்டேன்” என தெரிவித்தார். 


இதற்கு பதில் சொன்ன விசித்ரா, “நான் அடிப்படை கல்வி முக்கியத்துவம் குறித்து தான் நான் பேசினேன். நான் ஜோவிகாவின் தனிப்பட்ட விஷயம் பற்றி தான் பேசினேன். என்னோட பசங்களும் சராசரியாக படிக்கிறவர்கள் தான்.அதன்பிறகு என்ன வேண்டுமானாலும் செய்ய வேண்டும். எதையும் தவறாக சொல்லவில்லை. இந்த தலைமுறையே தப்பாக புரிந்துக் கொள்கிறார்கள். எத்தனையோ பேர் 10ஆம் வகுப்பு கூட படிக்க முடியாமல் போகிறது. நம்முடைய பெற்றோர்கள் தேவையான கல்வியை கொடுக்க தயாராக உள்ளபோது படிக்காவிட்டால் எப்படி என்ற நல்ல எண்ணத்தில் தான் கேட்டேன்” என கூறினார்


இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய ஜோவிகா, “கல்வி மற்றும் பொதுஅறிவு என்பது முக்கியம் தான். ஆனால் இன்றைக்கு எத்தனைப் பேர் நீட் பிரச்சினையால் தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். படிப்பு என்கிற விஷயத்துல தற்கொலை, தவறான பாதையில போறாங்க. அதை மாற்ற வேண்டுமென்ற எண்ணத்தை முன்வைத்து தான் நான் இங்கு வந்தேன். எல்லோரும் டாக்டராக போய்விட்டால் யார் தான் கம்பவுண்டர் ஆகுறது. படிச்சி தான் பெரிய ஆள் ஆகணும் என இல்லை. 


புத்தியுள்ள மனிதரெல்லாம் பாட்டை குறிப்பிட்டு அந்த பாட்டு உங்கள் தலைமுறைக்கு முன்னாடியே சொல்லியிருக்காங்க. எதிர்த்து நிற்கிறது நம்மளோட பவர்” என பல விஷயங்களை முன்வைத்தனர். ஜோவிகா பேசுகையில், “ படிப்பு எல்லாம் முக்கியமில்லை, படிச்சுதான் பெரிய ஆளாகுனும்னு இல்ல" என்ற கருத்தை உறுதியாக முன்வைத்தார். இதற்கு விசித்ரா மற்றும் யுகேந்திரன் தவிர மற்ற யாரும் பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை. ஜோவிகா சொன்னது தான் சரி என்ற கருத்தை சரி என சொல்லி கைதட்டி வரவேற்றனர். 


இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறிவிட்டது. பலரும் விசித்ராவுக்கு ஆதரவாகவே கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். “அவர் சொன்ன முறை வேண்டுமானால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் படிப்பு முக்கியம் என்ற அவரின் உட்கருத்தில் எந்த தவறுமில்லை.  எல்லோரும் ஜோவிகாவாக பிரபலம் அடையும் அளவிற்கு வசதியைப் பெறுவதில்லை. படிப்பை மட்டும் யாராலும் எடுக்க முடியாது என சினிமாவில் பேசும் வசனத்திற்கு கைதட்டும் நாம் விசித்ரா கருத்தை எதிர்ப்பது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளனர். 


இதேபோல் "பிக்பாஸை பார்க்கும் சராசரிக்கும் குறைவான குழந்தைகள் இதை மனதில் கொண்டு தங்கள் பெற்றோருக்கு எதிராக பேச வாய்ப்புள்ளது. தயவுசெய்து இதை ஊக்குவிப்பதை தவிர்க்கவும்" என தெரிவித்துள்ளனர். ஆனாலும் வீட்டில் இருந்த பலரும் கல்வி என்பது முக்கியமே இல்லை என தெரிவித்துள்ளனர்.


இந்த விவாதத்தில் “நாம் கல்வியே வேண்டாம் என ஒரேடியாக புறந்தள்ளி விட முடியாது. கல்வி என்பது வாழ்க்கையின் ஒரு கருவி தான். அதேபோல் தான் திறமையும். இந்த இரண்டையும் நிரூபிக்க ஒரு இடமும், பின்புலமும் தேவைப்படுவதே உண்மை. எல்லோரும் டாப் மார்க் எடுத்துவிட முடியாது என்பதால் நம்முடைய முந்தைய தலைமுறையினர் பல காரணங்களால் கல்வி கற்கவில்லை என வருத்தப்பட்டு தான், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து நம் தலைமுறையை கல்வி கற்க வலியுறுத்துகிறார்கள்” என்பது இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம்.