ஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் சர்வதேச 'எனர்கா கேமரிமேஜ்' விழாவின் முதல் இந்திய நடுவராக முன்னணி ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் (Ravi K Chandran) நியமிக்கப்பட்டுள்ளார்.  போலந்தில் நடைபெறும் இவ்விழாவின் 31ஆவது பதிப்பில் ரவி கே சந்திரன் நடுவராகப் பங்காற்ற உள்ளார். 


தமிழ் சினிமா தொடங்கி இந்திய சினிமா அளவில் கடந்த நாற்பது ஆண்டுகளாக பிரபல ஒளிப்பதிவாளராக வலம் வருபவர் ரவி.கே.சந்திரன். 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'பிளாக்', 'மை நேம் இஸ் கான்' உள்ளிட்ட பல வெற்றி பெற்ற படங்களில் பணியாற்றி விருதுகளைக் குவித்துள்ள ரவி.கே.சந்திரன், பிரபல இயக்குநர்களின் முதல் தேர்வாகவும் விளங்கி வருகிறார்.


“கேமரிமேஜ்“ என்பது சர்வதேச அளவில் புகழ்பெற்ற திரைப்பட விழாவாகும். ஒளிப்பதிவு கலையை இது கொண்டாடுகிறது. உலகெங்கிலும் உள்ள திரைக் கலைஞர்களால் ஆஸ்கருக்கு சமமாக கருதப்படும் இந்த விழா, விருது பெறும் திரைப்படங்களையும் கலைஞர்களையும் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்துவதற்காக புகழ்பெற்று விளங்குகிறது. மேலும், ஆஸ்கரைப் போல் இல்லாமல், குறிப்பிட்ட பிரிவுகளில் விருதுகளை வழங்கி திரைப்பட உருவாக்க கலை மீது தனக்குள்ள அர்ப்பணிப்பை இது பறைசாற்றுகிறது.


'மை நேம் இஸ் கான்' படத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக 2010ஆம் ஆண்டில் எனர்கா கேமரிமேஜால் கோல்டன் ஃபிராக் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் ஆவார். 


இந்த  ஆண்டின் எனர்கா கேமரிமேஜ் விழா வரும் நவம்பர் 11 முதல் 18ஆம் தேதி வரை போலந்தில் உள்ள டோரன் நகரில் நடைபெறுகிறது. டேரன் அரோனோஃப்ஸ்கி, ரோஜர் டீக்கின்ஸ் மற்றும் ரால்ப் ஃபியன்னெஸ் உள்ளிட்ட சர்வதேச புகழ்பெற்ற பல கலைஞர்கள் இவ்விழாவுக்கு இதற்கு முன்னர் அழைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், ஐ.எஸ்.சி என்று அழைக்கப்படும் இந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்தையும் (The Indian Society of Cinematographers) எனர்கா கேமரிமேஜ் விழாவில் ரவி.கே.சந்திரன் பிரதிநிதித்துவப்படுத்துவார். கேமரிமேஜ் ஜூரியாக மூத்தக் கலைஞர் ரவி கே சந்திரன் நியமிக்கப்பட்டிருப்பது இந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்திற்கு பெருமை என சங்கத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும், இந்தியத் திரைப்படத் துறை சர்வதேச அரங்கில் அதற்குரிய அங்கீகாரத்தை பெறுவதற்கான ஒரு படியாகவும் இந்த நியமனம் பார்க்கப்படுகிறது.


தற்போது கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் 'தக் லைஃப்' (Thug Life) திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், அதில் இடம்பெற்றுள்ள ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்த காட்சிகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: Director Ramana : விஜய்யுடன் முதல் படம்.. அடுத்தடுத்த தோல்விகள்.. திருமலை இயக்குநர் என்ன செய்றார்?


Boopathy Pandian: ’ஒரு காலத்தில் கொண்டாடப்பட்டவர் .. ஆனால் இன்று’ .. இயக்குநர் பூபதி பாண்டியன் என்ன ஆனார்?