தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமாக இருந்தவர்கள் இன்று என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள் என ரசிகர்கள் பலருக்கும் தெரியவில்லை. அவர்களை பற்றி ஒரு குட்டி ரீவைண்ட் செய்து பார்க்கலாம். 


ஜி.பூபதி பாண்டியன் 


இந்த தொகுப்பில் நாம் முதலில் பார்க்கவிருப்பது இயக்குநர் பூபதி பாண்டியன் தான். 2005 முதல் 2018 ஆம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்த பூபதி பாண்டியன் கடந்த 5 ஆண்டுகளாக படம் எதுவும் இயக்கவில்லை. 


இவர் இயக்குநர் சுந்தர்.சியிடம் தான் உதவி இயக்குநராக பணியாற்றினார். அதுமட்டுமல்லாமல் அவர் இயக்கிய வின்னர் மற்றும் கிரி படங்களுக்கு வசனம் எழுதியிருந்தார் பூபதி பாண்டியன். இப்படியான நிலையில் தான் துள்ளுவதோ இளமை வெற்றிக்குப் பிறகு தனுஷை வைத்து 'என்னை மட்டும் காதல் பண்ணு’ என்ற படத்தை பூபதி பாண்டியன் இயக்குவதாக இருந்தது. ஷெரின் தான் இந்த படத்தில் ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது. 


இயக்கிய படங்கள் 


ஆனால் அதற்குள் தனுஷ் காதல் கொண்டேன், திருடா திருடி, புதுக்கோட்டையில் இருந்து சரவணன், ட்ரீம்ஸ், சுள்ளான் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியானது. இதனைத் தொடர்ந்து பூபதி பாண்டியன் தனுஷூடன் கமிட்டான படம் 2005 ஆம் ஆண்டு வெளியானது. இம்முறை படத்தின் தலைப்பு மற்றும் ஹீரோயின் இருவரும் மாற்றப்பட்டிருந்தனர். அந்த படம் தான் ‘தேவதையைக் கண்டேன்’. தனுஷ் காதலுக்காக உருகி உருகி இப்படத்தில் நடித்திருப்பார். இந்த படத்தின் கிளைமேக்ஸ் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே பேசுபொருளானது. 


இந்த படத்தின் வெற்றி இரண்டாவது முறையாக தனுஷூடன் “திருவிளையாடல் ஆரம்பம்” படத்தில் இணைய வைத்தது. இந்த படம் சூப்பரான வெற்றியைப் பெற தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்தார் பூபதி பாண்டியன். மூன்றாவதாக 2007 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ‘மலைக்கோட்டை’ படத்தை இயக்கினார். இந்த படமும் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. 


இப்படியான நிலையில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு பூபதி பாண்டியன் இயக்கத்தில் எந்த படமும் வெளியாகவில்லை. 2010 ஆம் ஆண்டு புதுமுகங்களாக பாலாஜி பாலகிருஷ்ணன், மேக்னா ராஜ் ஆகியோரை வைத்து ‘காதல் சொல்ல வந்தேன்’ என்ற படத்தை எடுத்தார். ஆனால் இப்படம் சரியாக செல்லவில்லை. இதனையடுத்து மீண்டும் விஷாலை வைத்து இயக்கிய ‘மலைக்கோட்டை’ படம் 2013 ஆம் ஆண்டு வெளியானது. இப்படம் படுதோல்வி அடைய பூபதி பாண்டியன் கேரியரில் சறுக்கல் ஏற்பட்டது. 


அவரின் அடுத்தப்படம் வெளியாக கிட்டதட்ட 5 ஆண்டுகள் ஆனது. விமல் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான மன்னர் வகையறா படம் தான் பூபதி பாண்டியன் இயக்கிய கடைசிப்படம். அதன்பிறகு எந்த படமும் இந்த 5 ஆண்டுகளில் அவர் இயக்கத்தில் வெளியாகவில்லை. சினிமாவை பொறுத்தவரை வெற்றி ஒருவரை எந்த உச்சத்துக்கும் அழைத்துச் செல்லும், ஒரே ஒரு தோல்வி கூட பாதாளத்தில் தள்ளும். ஆனால் முயற்சி என்றும் தோற்காது. அதனால் பூபதி பாண்டியன் மீண்டும் வருவார், மீண்டு வருவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.