இயக்குநர் ரமணா


தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிப்படங்களை தனது முதல் படமாக இயக்கி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இயக்குநர்களில் ஒருவர் ரமணா.

கார்காலம் என்கிற படத்திற்கு திரைக்கதை எழுதி எப்படியாவது அதை படமாக இயக்க வேண்டும் என்று முயற்சி செய்தார் ரமணா. ஆனால் அவர் கதை சொல்லிய தயாரிப்பாளர்கள் அப்போது வெளியான கமர்ஷியல் படங்களின் மாதியே ஒரு திரைக்கதையை எதிர்பார்த்தார்கள். ரமணாவிடம் கார்காலம் படத்தின் கதையை கேட்ட பிரகாஷ் ராஜ் அதில் நடிக்க சம்மதித்தார். ஆனால் இந்தப் படத்தை தயாரிக்க யாரும் முன்வரவில்லை. தனக்கு பிடித்த மாதிரியான படங்களை எடுக்க வேண்டும் என்றால் முதலில் கமர்ஷியலாக ஒரு படத்தை எடுத்து, தான் வெற்றிபெற வேண்டும் என்று முடிவு செய்தார் ரமணா.


திருமலை


விஜய் நடிப்பில் திருமலை படத்தில் தன்னுடைய முதல் படத்தை இயக்கினார். ரொமாண்டிக் கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜயின் கரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது திருமலை படம். விஜயை மாஸான ஒரு நடிகராக காட்டியது மட்டுமில்லாமல் அவரது நடிப்பின் வேறு பக்கத்தை வெளிக் கொண்டுவந்தது. இதனைத் தொடர்ந்து விஜயகாந்தை வைத்து பார்த்தசாரதி என்கிற படத்தை இயக்க நினைத்தார். இந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் வாய்ப்புகள் அவருக்கு வந்தன. ஆனால் அந்த வாய்ப்புகளை மறுத்து தனுஷை வைத்து 2004-ஆம் ஆண்டு சுல்லான் படத்தை இயக்கினார். சுல்லான் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் ரீதியாக தோல்வியடைந்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2006 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக ஆதி படத்தை இயக்கினார். மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் படமும் தோல்வியில் முடிந்தது.


அடுத்தடுத்த தோல்விகள்


இதனைத் தொடர்ந்து தெலுங்குவில் மகேஷ் பாபுவுடனும் தமிழில் சரத்குமார் உடன் இணைந்து ஒரு படம் இயக்கவிருப்பதாக ரமணா தெரிவித்திருந்த நிலையில் இந்த இரண்டு படங்களும் கைவிடப்பட்டன. சினிமாவில் இன்னொரு படத்தை இயக்க போராடிக் கொண்டிருந்த ரமணா புற்று நோயால் பாதிக்கப்பட்ட தகவல் 2011 ஆம் ஆண்டு வெளியானது. 2013 ஆம் ஆண்டு அவர் குணமடைந்து விட்டதாகவும் தனது குரலை இழந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.


மீண்டு வருவார் ரமணா


சமீபத்தில் வெளியான டை நோ சர்ஸ் படத்தில் நடித்திருந்த ரமாணாவைப் பார்த்து இயக்குநர் மிஸ்கின் கூறினார் "திருமலை மாதிரியான மிகப்பெரிய படத்தை எடுத்தவர் ரமணா. ஆனால் உடல்ரீதியிலான பிரச்சனைகளால் அவரால் பேச முடியாமல் போனது. இப்போது இந்த மேடையில் அவரை பார்த்தபொழுது அவர் எப்படியோ பேச பழகிவிட்டார். எனக்கு நிச்சயம் அவர் மீண்டும் ஒரு பெரிய படத்தை இயக்குவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இந்த இரண்டாவது ரவுண்டில் அவர் நிச்சயம் ஒரு பெரிய இயக்குநராக வருவார்." என்று கூறியிருந்தார்.

என்னதான் திருமலை மாதிரியான ஒரு மிகப்பெரிய வெற்றிப்படத்தை இயக்கி இருந்தாலும் ரமணா எடுக்க நினைத்தது என்னவோ தன் மனதிற்கு நெருக்கமான கார்காலம் என்கிற யாரும் படிக்காத ஒரு கதையைதான்.