Cinema News Today LIVE : ரன் பேபி ரன் படத்தின் வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்த ஆர்.ஜே.பாலாஜி!
Cinema News Today LIVE Updates, 17 February : சினிமா வட்டாரத்தில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளின் உடனுக்குடன் அப்டேட் இங்கே!
சமீபத்தில், ஆர்.ஜே பாலாஜியின் நடிப்பில் ரன் பேபி ரன் எனும் த்ரில்லர் படம் வெளியானது. அப்படத்திற்கு ஆதரவு கொடுத்த மக்களுக்கு ஆர்.ஜே.பாலாஜி நன்றி தெரிவித்துள்ளார்.
மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் அதிதி ஷங்கர், பர்த்டே பாய் சிவாவுடன் போட்டோ எடுத்துள்ளார்.
ஜெயம் ரவியுடன், “போயா போ” என்ற வசனம் பேசி, அந்நியன் படத்தில் நந்தினியாக கலக்கிய சதா, இன்று தனது 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பிரபல தொகுப்பாளினி டிடி என்கிற திவ்ய தர்ஷினி தனது 38 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
சியான் விக்ரம், தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். தற்போது, தங்கலான் பட கெட்டப்பில் சில போட்டோக்களை பதிவிட்டுள்ளார் விக்ரம்.
புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட ஷேடோ அண்ட் போன் சீரிஸின் இரண்டாம் பாகத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இது
நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பப்படும்.
ஷங்கர் இயக்கும் இந்தியன் 2-வின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடங்கியது.
ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இன் கார் படத்தில் ரித்திக்கா சிங் நடித்துள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட அப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
தனுஷ் நடித்த வாத்தி படம் இன்று வெளியானது. வாத்தி படத்தின் இடைவேளை நேரத்தில், லியோ படத்தின் ப்ரோமோ வீடியோ திரையிடப்பட்டுள்ளது. அப்போது, லியோவின் ப்ரோமோ வீடியோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படம், வருகிற பிப்ரவரி 22 ஆம் தேதியன்று அமேசான் ப்ரைமில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தாளையொட்டி, அவர் நடித்து வரும் மாவீரன் படத்தின் முதல் சிங்கிளான “சீனா சீனா” பாடல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்குமாரின் புத்தம் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.
கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயனின் 38 வது பிறந்தாள் இன்று!
காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு சிறந்த நம்பிக்கை நட்சத்திர விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
வாத்தி படத்தின் முழு விமர்சனம் : வாத்திக்கு விசில் போடலாமா? விளாசித் தள்ளலாமா? - ஃபர்ஸ்ட் கிளாஸ் ரிவ்யூ இதோ....!
பகாசுரன் படத்தின் முழு விமர்சனம் : நெற்றியில் பட்டை! கழுத்தில் ருத்ராட்சம் கொட்டை! பாலியல் தொழிலை பங்கம் செய்தாரா பகாசூரன்? படம் எப்படி?முழு விமர்சனம் இதோ
ட்விட்டர் விமர்சனத்தை படிக்க : வாத்தி தனுஷ் எப்படி... நெட்டிசன்கள் சொல்வது என்ன... சுடச்சுட ட்ரெண்டிங் ட்விட்டர் விமர்சனம் இதோ!
ட்விட்டர் விமர்சனத்தை படிக்க : மோகன் ஜியின் வழக்கமான படமா... இல்லை புது பாணி படமா... பகாசூரன் ட்விட்டர் விமர்சனம் இதோ!
தனுஷ் நடிப்பில் வாத்தி படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், பலரும் படம் நன்றாகவுள்ளது என தெரிவித்து வருகின்றனர்.
செல்வராகவனின் பகாசுரனுக்கு, ட்விட்டரில் பாசிடீவான விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கின்றன.
Background
வாத்தி விமர்சனம்
தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடிகை சம்யுக்தா , சமுத்திரகனி, கென் கருணாஸ், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “வாத்தி”. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
கதையின் கரு
1990 தொடக்க காலக்கட்டத்தில் இந்தியாவில் தனியார் மயமாக்கல் கொள்கை அமலுக்கு வருகிறது. மருத்துவம், பொறியியல் போன்ற கல்வியின் வியாபார வளர்ச்சியின் நோக்கத்தை தெரிந்து கொண்ட தனியார் பள்ளிகள், நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி மையங்களை தொடங்கி நன்கு தேர்ந்த பள்ளி ஆசிரியர்களை விலைக்கு வாங்கி அரசு பள்ளிகளை மூடுகின்றனர். மூடப்பட்ட அரசு பள்ளிகளை திறக்கக்கோரி மக்கள் போராட்டம் வெடிக்க அரசு கட்டண ஒழுங்குமுறை விதியை கொண்டு வந்து தனியார் பள்ளிகளுக்கு செக் வைக்க நினைக்கிறது.
இதனை தெரிந்து கொண்ட அந்த கூட்டமைப்பின் தலைவராக வரும் சமுத்திரக்கனி அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அனைவருக்கும் கல்வி கொடுப்பதாக அறிவிக்கிறார். மூடப்பட்ட அரசு பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகளை சேர்ந்த இரண்டாம், மூன்றாம் தர ஆசிரியர்களை அனுப்பி கல்வியை கெடுக்க நினைக்கிறார். அதில் கல்வி அனைவருக்கும் போய் சேர வேண்டும் என நல்ல எண்ணம் கொண்ட வாத்தியாராக தனுஷ் இருக்கிறார். தனுஷ் சென்ற ஊரில் உள்ள மாணவர்களுக்கு கல்வி கிடைத்ததா? அல்லது சமுத்திரகனியின் எண்ணம் நிறைவேறியதா? என்பதை பொறுமையை சோதிக்கும் வகையில் சொல்கிறது “வாத்தி” திரைப்படம்.
நடிப்பு எப்படி?
பாலமுருகனாக வரும் தனுஷ் படத்தை ஒன் மேன் ஆர்மியாக தாங்குகிறார். ஆரம்பத்தில் கல்வித்துறையில் தனியார் பள்ளிகளின் அட்டகாசங்களை படம் தோலுரித்து காட்டப்போகிறது என நினைப்பவர்களுக்கு சற்று ஏமாற்றமே மிஞ்சுகிறது. எந்த ஒரு காட்சியும் அதிக அழுத்தம் இல்லாமல் காட்சிப்படுத்தப்பட்டதுபோல இருக்கிறது.
குழந்தை தொழிலாளர்களை மீண்டும் பள்ளிக்கு வர வைப்பது, சாதிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது என ஏற்கனவே பல படங்களில் காட்சிகள் வந்து சலிப்பை ஏற்படுத்துகிறது. வகுப்புகள் எடுக்காமல் இருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் , வியாபார நோக்கம் இல்லாத தனியார் பள்ளி ஆசிரியர்கள் என இன்னும் எத்தனை காலத்துக்கு தான் சொன்னதை மீண்டும் மீண்டும் சொல்லப் போகிறார்கள்.
மீனாட்சியாக வரும் நாயகி சம்யுக்தா மேனனுக்கு பெரிய அளவில் கேரக்டர் இல்லை. ஆனாலும் வா வாத்தி பாடலில் ரசிக்க வைக்கிறார். அதேசமயம் படம் முழுக்க தெலுங்கு சினிமா மேக்கிங் ஸ்டைல் அப்படியே தெரிகிறது. அதனால் படம் பார்க்க செல்பவர்களால் கதையில் ஒன்ற முடியாமல் போகிறது. சமுத்திரகனியின் மிரட்டலான வில்லன் ஆக்டிங் இதில் மிஸ்ஸிங்.
குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்க ஊரில் உள்ள தியேட்டரை பயன்படுத்துவது, விதவிதமான கெட்டப் போட்டு பாடம் நடத்துவது , பாரதியார் வேடம் போட்டு தனுஷ் சண்டை போடுவது, தங்கள் பிள்ளைகளின் கல்வியை கெடுக்க நினைக்கும் ஊர் மக்கள் உடனே திருந்துவது என லாஜிக்கே இல்லாத காட்சிகள் உள்ளது. ஒரே ஒரு காட்சியில் இயக்குநர் பாரதிராஜா தலைகாட்டுகிறார். கென் கருணாஸ் எதற்கு வருகிறார் என்றே தெரியவில்லை.
இசை எப்படி?
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் வா வாத்தி, நாடோடி மன்னன் பாடல்கள் ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்கள் படத்துடன் ஒன்றவில்லை. பின்னணி இசையில் சில இடங்களில் நன்றாக வந்துள்ளது. கதை நன்றாக இருந்தாலும், திரைக்கதையில் சொதப்பி, இயக்குனர் வெங்கி அட்லூரி ரசிகர்களின் நம்பிக்கையை பொய்யாக்கியுள்ளார்.
படிப்பு தான் மரியாதையை சம்பாதிச்சு தரும், படிப்புங்கிறது பிரசாதம் மாதிரி கொடுங்க.. அதை ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு மாதிரி விற்காதீங்க , கல்வியில கிடைக்கிற காசு அரசியல்ல கிடைக்காது என ஆங்காங்கே வரும் வசனங்கள் கைதட்ட வைக்கிறது.
மொத்தத்தில் “வாத்தி” படம் ஒரு தெலுங்கு பேசும் தமிழ் திரைப்படம்...!
பகாசுரன் விமர்சனம்
திரெளபதி, ருத்ர தாண்டவம், பழைய வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபலமான இயக்குனர், மோகன் ஜி. அவரது பட வரிசையில், தற்போது புதிதாக இணைந்துள்ள திரைப்படம்தான் பகாசூரன். இப்படத்தில், பிரபல இயக்குனர் செல்வராகவன், ‘சதுரங்க வேட்டை’ புகழ் நடராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். செல்வராகவன் மட்டுமன்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பகாசூரன் படத்தின் மேல் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அந்த படம் எப்படிதான் இருக்கு? முழு விமர்சனத்தை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
கதையின் கரு:
யூடியூபில் க்ரைம் குறித்த வீடியோக்களை வெளியிட்டு வரும் ரிட்டையர்டு ஆர்மி மேனாக வருகிறார் நட்ராஜன். இவரது சொந்த அண்ணன் மகள் ரம்யா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். வீட்டில் அனைவரும் திருமணத்திற்கு வற்புறுத்தியதால்தான் ரம்யா தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறை கேஸை முடிக்கின்றனர். ஆனால், ரம்யாவின் மொபைல் போன் நடராஜனின் கைக்கு கிடைக்கின்றது. அதில், ரம்யா பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததையும், திருமணம் செய்து கொண்டாலும் இந்த தொழிலில் இருந்து நீ தப்ப முடியாது என யாரோ இவரை மிரட்டுவதையும் தெரிந்து கொள்கிறார் நட்ராஜன்.
அந்த மிரட்டும் நபர் யார் என்று தேடுகையில், பல பெண்கள் பண கஷ்டத்தினால் பாலியல் தொழிலில் பலவந்தமாக தள்ளப்படுவதையும், நட்ராஜன் அறிந்து கொள்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்துவோரையும் அவர்களுக்கு உடந்தையாக இருப்போரையும் தேடித்தேடி கொள்கிறார், பீமராசு(செல்வராகவன்).இருவரது கதையும் வெவ்வேறு வகையில் பயணித்து ஒரு கட்டத்தில் ஒன்றாக இணைகின்றன. பிறகு என்ன நடந்தது? என்பதுதான் கதை. இதற்கிடையில் செல்வராகவனின் கலங்க வைக்கும் ஃப்ளேஷ் பேக், அனைவரும் அறிந்த அதே சமூக கருத்து என படம் பார்ப்பவர்களை கடுப்பேற்றும் அளவிற்கான கதையை எடுத்துள்ளார் மோகன்.ஜி.
போர் அடிக்காத திரைக்கதை:
பகாசூரன் பட இயக்குனர் மோகன் ஜியின் மிகப்பெரிய ப்ளஸ் பாய்ண்டாக கூறப்படுவது, அவரது போர் அடிக்காத திரைக்கதைதான். அதையே இந்த படத்திலும் ஃபாலோ செய்துள்ளார். என்னதான் சில இடங்களில் அவரது கருத்துகளை ஏற்க முடியவில்லை என்றாலும், அவர் கதையை நேர்த்தியாக கொண்டு போன விதமும் பலரை வியக்கத்தான் வைக்கிறது.
இருந்தாலும், முதல் பாதி படம் முடிவதற்கு முன்பாகவே பலர் ‘இன்னுமாடா இன்டர்வல் விடல’ என்று கேட்கும் சத்தம் காதில் விழத்தான் செய்கிறது.
அசத்தல் பர்ஃபாமன்ஸ் கொடுத்த செல்வராகவன்!
பீஸ்ட் படத்தில் குட்டி ரோல் ஒன்றில் நடித்த செல்வராகவன், அடுத்து கீர்த்தி சுரேஷுடன் சாணிகாயிதம் என்ற படத்தில் வெறிப்பிடித்து கொலை செய்யும் மனிதராக நடித்திருந்தார். செல்வாவிற்கு அதே ரோல்தான் இந்த படத்திலும்.
முதல் காட்சியிலேயே ஒருவரை சரமாறியாக போட்டுத்தள்ளும் செல்வராகவன், அடுத்த சீனில் நெற்றி நிறைய பட்டையும் கழுத்தில் ருத்திராட்ச கொட்டயுமாக வருகிறார். ஆரம்பிக்கையில் அவரது நடிப்பு மனதில் ஒட்டவில்லை என்றாலும், படம் முடிந்து எழுந்து செல்கையில் மனம் முழுவதும் அவர்தான் இருக்கிறார். தனது மகளின் சாவிற்கு காரணமாக இருந்தவர்களை போட்டுத்தள்ளும் நேரத்தில் கொடூரமான பீமராசுவிற்கும், ஃப்ளாஷ்பேக்கில் அன்பான அப்பாவாக சாந்தமான பீமராசுவையும் நன்கு வித்தியாசப்படுத்தி பார்க்க முடிகிறது.
மகளை இழந்து கலங்கும் காட்சியிலும், தன் மகளைப் போல யாரும் இறக்கக்கூடாது என அவர் பலரை துவம்சம் செய்யும் காட்சியிலும் ரசிகர்கள் அனைவரையும் ஆட்கொண்டு விடுகிறார், செல்வா.
பிண்ணனி இசையில் மாஸ் காட்டியிருக்கிறார், சாம் சி.எஸ். ஆனால், பாடல்கள் அனைத்தும் சுமார் ரகமாக உள்ளதாக எதுவும் மனதில் ஒட்டாமல் நிற்கின்றன.
‘என்னங்க கதை இது’
இந்த டிஜிட்டல் யுகத்தில் செல்போனைத் தாண்டி உலகில் பல விஷயங்கள் மாறிவிட்டன. ஆனால், பகாசூரன் படத்திலோ நம்ம ஊரில் பழைய பெருசுகள் உளருவதைப் போல “எல்லாப் பிரச்சனையும் இந்த போனாலதான் வருது” என்று கூறும் கருத்தை சீரியசாக எடுத்துக்கொண்டுள்ளனர். பெண்கள், வீடியோ காலில் தங்களது காதலரிடம் அந்தரங்கமாக பேசுவதையும், காதலருடன் முத்தத்தை பரிமாறிக்கொள்வதையும் கூட, “தப்பு தப்பு தல மேல கொட்டு” என்பதைப் போல படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, தனது காதலருக்கு முத்தம் கொடுத்ததை வீடியோ எடுத்த சிலர் தன்னை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்துவதாக செல்வராகவனின் மகள் தனது தந்தையிடம் வந்து கூறுவார். அப்போது, “பெரிய தப்பு பன்னிட்டேன் பா..” என்று கூறி கதறுவார். அப்போது செல்வராகவன், “அழாதம்மா, கண்ணு ராஜாத்தி” என்று கூறிவாரே தவிர “நீ செய்ததில் ஒன்றும் தவறில்லை” என்று ஒரு வார்த்தைக் கூட கூறமாட்டார்.
மேற்கூறியதைப் போல, படத்தில் பல ஓட்டைகள் இருந்தன. அதையெல்லாம் பூசி மொழுகக் கூட இயக்குனர் முயற்சியை மேற்கொள்ளவில்லை. எல்லா காட்சியிலும், பெண்கள் நம்பி ஒருவனிடம் தங்களின் உடலைக் காட்டுவதையும், முத்தம் கொடுப்பதையும் குறை சொல்கிறார்களே அன்றி, அவர்கள் குறித்து வீடியோ வெளியிடும் நபர்களை ஒருவரும் ஒன்றும் சொல்லவில்லை. செல்போனால் வரும் பிரச்சனைகளை கூறிவிட்டு அதை கையாள வேண்டிய வழிமுறைகளைப் பற்றி பேசியிருந்தால் இயக்குனரைப் பாராட்டலாம். ஆனால், வெகுஜன மக்களின், “எல்லாமே மொபைல் போனாலதான்” என்ற கருதத்தையே இந்த படத்திலும் திணிக்க முயற்சித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. பெண்களை பாலியல் தொழிலில் எப்படி சிக்கவைக்கின்றனர் என்று கூறிய விதத்தை மட்டும் வேண்டுமானால் பாராட்டலாம்.
மொத்தத்தில் செல்வராகவனுக்காக வேண்டுமானால் பகாசூரனைப் பார்க்கலாம், மற்றபடி சொல்லிக் கொள்வதற்கு ஒன்றுமில்லை என்றே கூற வேண்டும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -