சென்னை பனையூரில் எனக்கு ஒரு அலுவலகம் வைத்துள்ளேன். அங்கே என்னை வந்து பார்க்கலாம் என கோபத்தில் மேடையிலேயே மைக்கை தூக்கி வீசிவிட்டு அன்புமணி வெளியேறிய சம்பவம் பாமக தொண்டர்கள் மத்தியில் ஆதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


விழுப்புரத்தில் இன்று பாமக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸும் தலைவர் அன்புமணியும் கலந்து கொண்டு பேசினர். அப்போது ராமதாஸ் பாமக இளைஞரணித் தலைவர் முகுந்தனுக்கு பொறுப்பு வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் முகுந்தனௌக்கு பொறுப்பு வழங்க கூடாது என அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். கட்சியில் சேர்ந்த 4 மாதங்களில் எப்படி பொறுப்பு வழங்க முடியும். கட்சியில் வந்து 4 மாதம் ஆனவருக்கு என்ன அனுபவம் இருக்கும் என கேள்வி எழுப்பினார். 


அதற்கு பதிலளித்து பேசிய ராமதாஸ், ”பாமகவை உருவாக்கியது நான் தான் இதனை. நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். அதுதான் நடக்கணும். ஏற்கவில்லை என்றால் விருப்பம் இல்லாதவர்கள் விலகி கொள்ளுங்கள்” என ராமதாஸ் கோபமாக தெரிவித்தார். 


தொடர்ந்து பேசிய் அன்புமணி, பனையூரில் எனக்கு ஒரு அலுவலகம் இருக்கிறது. என்னை சந்திக்க நினைத்தால் அங்கு வந்து பார்க்கலாம் என தெரிவித்தார். 


மேடையிலேயே தந்தை மகன் கருத்து வேறுபாடு வெளிப்பட்டது பாமக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


அன்புமணி ராமதாஸ் இடையே குழப்பத்துக்கு காரணமான முகுந்தன் ராமதாஸின் பேரன் ஆவார். பாமக நிறுவனர் ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மகன் தான் ப.முகுந்தன். சகோதரி மகன் முகுந்தனுக்கு இளைஞரணி தலைவர் பதவியை கொடுத்ததால்தான் இந்த பிரச்சினை வெடித்துள்ளது. முன்னதாக ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் பாமக இளைஞரணி தலைவராக இருந்தார். பின்னர் அன்புமணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் அந்த பதவியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பதவிக்கு ஆள் நியமிக்கப்படாமல் சும்மாகவே இருந்தது. அதற்கு முன்னதாக அன்புமணிதான் இளைஞரணித் தலைவராக பதவி வகித்து வந்தார். அவர் தலைவரானதும்தான் அந்த பதவி ஜி.கே. மணியின் மகனுக்கு சென்றது. அவரும் ராஜினாமா செய்யவும் தற்போது முகுந்தனுக்கு வழங்கி ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 


இதுகுறித்து பாமக எம்.எல்.ஏ அருள் கூறுகையில் “ராமதாஸ் - அன்புமணி இடையே கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. இப்போது வெளிப்பட்டது சலசலப்புதான். இன்றைக்குள் எல்லாம் சரியாகிவிடும்” எனத் தெரிவித்துள்ளார். 


இதனிடையே பாமக பொதுக்கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதாவது ”அதானி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என திமுக அரசுக்கு கண்டனம். சாதிவாரி கணக்கெடுப்பை கட்டாயமாக்க சட்ட திருத்தம் தேவை. தமிழகத்தில் 3 முறை உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்” உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.