மதுக்கடையை அதிகரித்துவிட்டு குடி குடியை கெடுக்கும் என விளம்பரம் செய்வதில் என்ன பயன் என அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக அரசுடன் கூட்டணி வைத்திருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியே மது ஒழிப்பு மாநாட்டை கையில் எடுத்து பூரண மதுவிலக்கு வேண்டும் என கோரிக்கை விடுத்தது தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. திருமாவளவனின் இந்த கோரிக்கைக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு கொடுத்தன.
ஆனால் தமிழகத்தில் மதுக்கடைகள் குறைக்கப்படுகிறதா என்றால் கேள்விக்குறியாகவே உள்ளது. சில இடங்களில் தமிழக அரசு மதுக்கடைகளை மூடுவது போல் பாவணை காட்டி பெரும்பாலான இடங்களில் திறப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், தேனி மாவட்டம் பூதிபுரத்தில் டாஸ்மாக் கடையை திறக்க தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், “பூதிப்புரம் ராஜபூபால சமுத்திர கண்மாய் அருகே புதிய டாஸ்மாக் கடை திறக்க திட்டமிடப்பட்டு வருகிறது. அப்பகுதியில் பெண்கள் கழிவறையும், கண்மாய் கரைப்பகுதியும் உள்ளது. ஏற்கெனவே அப்பகுதியி 3 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில் 4வதாக ஒரு கடை தேவை இல்லை. எனவே அந்த கடையை திறக்க தடை விதிக்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை “மதுக்கடையை அதிகரித்துவிட்டு குடி, குடியை கெடுக்கும் என தொலைக்காட்சியில் அரசு விளம்பரம் செய்வதில் என்ன பயன் உள்ளது? இருக்கும் மதுக்கடைகளை குறைக்க வழியை பாருங்கள். மூலை முடுக்கெல்லாம் மதுக்கடைகள் உள்ளன. இதை அதிகரிப்பதால் என்ன பயன்” என கேள்வி எழுப்பியுள்ளது.