Chennai International Film Festival: சென்னையில் நடைபெறும் 21வது சர்வதேச திரைப்பட விழாவில் தண்டட்டி, கண்ணே கலைமானே உள்ளிட்ட தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. 

சர்வதேச திரைப்பட விழா:


இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு ஆண்டு தோறும் சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. தமிழக அரசின் ஒத்துழைப்புடன் நடைபெறும் இந்த விழா வரும் 14ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடைபெறும் ​என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 57 நாடுகளை சேர்ந்த 150 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது. இதில் உடன்பால், கருமேகங்கள் கலைகின்றன, மாமன்னன், அயோத்தி, செம்பி, ராவண கோட்டம், போர் தொழில், அநீதி, சாயாவனம், விடுதலை உள்ளிட்ட 12 திரைப்படங்கள் திரையிட தேர்வு செய்யப்பட்டன. 

திரைப்படம்:


விழாவின் முதல் நாளான 14ம் தேதி காலை 10 மணிக்கு முதல் படமாக லிட்டில் ஃபாரஸ்ட் என்ற கொரியன் திரைப்படம் திரையிடப்பட உள்ளது. அடுத்ததாக பகல் ஒரு மணிக்கு கேரள இயக்குநர் அபிஜித் அசோகன் இயக்கிய ஜனனம் 1947 பிராணயம் துடாருன்னு படம் திரையிடப்படுகிறது. 15ம் தேதி காலை 9.15 மணிக்கு பிரேசில் படமான பெட்ரோ, பிட்வீன் தி டெவில் அண்ட் தி டீப் புளூ சீ படமும், 2.30 மணிக்கு பட்டு படமும், மாலை வைல்டு ஸ்வான்ஸ் படமும் திரையிடப்படுகிறது. 

 

தொடர்ந்து 17-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு தமிழில் பசுபதி நடிப்பில் வெளிவந்த தண்டட்டி படம் திரையிடப்படுகிறது. 18ம் தேதி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணே கலைமானே படமும் திரையிடப்பட உள்ளது. இதேபோன்று 19ம் தேதி அக்னிஹோத்ரி இயக்கத்தில் வெளிவந்த வாக்சின் வார் படம் திரையிடப்பட உள்ளது.

வாக்சின் வார்:


முன்னதாக கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் வாக்சின் வார் திரைப்படம் வெளியிடப்பட்டு சர்ச்சையானது. இவை மட்டும் இல்லாமல் விழாவில் 8 ஈரானியப் படங்கள், 5 கொரியப் படங்கள், பிரெஞ்சு, ஹங்கேரி, மெக்ஸிகோ நாடுகளில் இருந்து தலா 3 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

 

டிசம்பர் 14-ம் தேதி  தொடங்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவை தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள், திரைப்பட ஆளுமைகள் பங்கேற்க உள்ளனர்.