ரஜினிகாந்த்


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நாளை தனது 73 ஆவது வயதை எட்டுகிறார். தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் பெறும் நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் ரஜினிகாந்த். லைஃப்ஸ்டைல் ஏசியா வெளியிட்ட தகவலின்படி, ரஜினிகாந்த் அவர்களின் மொத்த சொத்து மதிப்பு மொத்தம் 430 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.  ஒரு படத்திற்கு சராசரியாக 100 கோடி ரூபாய் ரஜினி சம்பளமாக வாங்கி வந்துள்ளதாகவும் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு ரூபாய் 110 கோடி ரூபாய் ரஜினி சம்பளமாக பெற்றதாகவும் தகவல் வெளியானது. இந்திய சினிமாவிலேயே அதிகம் சம்பளம்  வாங்கும் ரஜினிகாந்துக்கு ஒரு காலத்தில் எவ்வளவு சம்பளம் கேட்டு வாங்க வேண்டும் தெரியவில்லை என்றால் நம்ப முடிகிறதா?


ஆரம்ப கால சம்பளம்


ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்க வேண்டும் என்று தனக்கு தெரியாமல் இருந்ததாக ஒருமுறை மேடையில் ரஜினிகாந்த் பேசினார். ஓரளவிற்கு அங்கிகரிக்கப் பட்ட நடிகராக உருவான ரஜினிகாந்த் ஒரு படத்திற்கு 30 ஆயிரம் சம்பளமாக வாங்கி வந்துள்ளார்.


பஞ்சு அருணாச்சலம் இயக்கிய பிரியா படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருந்த போது அந்தப் படத்திற்கு 25 முதல் 30 ஆயிரம் சம்பளமாக கொடுத்தால் போதும் என்று ரஜினி கூறியுள்ளார். அப்போது ஆச்சரியமடைந்த பஞ்சு அருணாச்சலம். “ உனக்கு இப்போ என்ன மார்க்கெட் தெரியுமா. நீ நடிக்கிற படத்தால எவ்வளவு லாபம் சம்பாரிக்கிறாங்க தெரியுமா’ என்று கேட்டுள்ளார். பிரியா படத்திற்காக  ரஜினிக்கு 1 லட்சம் 10 ஆயிரம் ரூபாய் ரஜினிக்கு சம்பளம் கொடுத்துள்ளார் பஞ்சு அருணாச்சலம். லட்சத்தில் முதல் முறையாக ரஜினிகாந்த் வாங்கியது இந்தப் படத்தில் தான். 


தலைவர் 170


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது த. செ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் அமிதாம் பச்சன், ஃபகத் ஃபாசில் , ரித்திகா சிங், துஷாரா , மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். 


தலைவர் 171


இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த். சன் பிக்ச்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சில காட்சிகள் ஐமேக்ஸின் படம்பிடிக்கப்பட இருப்பதாகவும், சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


மேலும் இந்தப் படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் பாசிட்டிவ், நெகட்டிவ் என இரு அம்சங்களைக் கொண்டிருக்கும் என்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.