சந்திரமுகி 2
பி.வாசு இயக்கத்தில் உருவாகியிருக்கும் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தின் இசை வெளியீடு நேற்று முன் தினம் (ஆக.25) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பி.வாசு, நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகை கங்கனா ரனாவத், நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் கீரவாணி எனப் பலரும் கலந்துகொண்டு படத்தைப் பற்றி பேசினார்கள்.
மேடம், கங்கனா, கங்கு
நிகழ்ச்சியில் பேசிய கங்கனா ரனாவத். “நான் இதுவரை எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு கேட்டு சென்றதில்லை. ஆனால் சந்திரமுகி படத்தில் நடிக்க நான் வாய்ப்பு கேட்டேன். இயக்குநர் வாசுவுக்கு என்னைப் பற்றித் தெரியும். என்னுடைய ஹேர்ஸ்டைல் முதல் உதட்டின் நிறம் வரை சந்திரமுகி நடப்பது போலவே எனக்கு நடந்து காட்டி சொல்லிக் கொடுத்தார்.
ராகவா லாரன்ஸ் ரொம்ப சார்மிங்கான ஒரு நபர். நான் அவருக்கு மிகப்பெரிய ரசிகை. படப்பிடிப்பின் முதல் நாள் என்னை அவர் மேடம் என்று அழைத்தார். அடுத்த நாள் கங்கனா என்று பெயர் சொல்லி அழைத்தார். மூன்றாவது நாள் கங்கு என்று கூப்பிட்டார். அந்த அளவிற்கு நாங்கள் நல்ல நண்பர்களாவிட்டோம்.
இசையமைப்பாளர் கீரவாணி நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது வாங்கிய போது நானே அந்த விருதை வாங்கியதை போல் மகிழ்ச்சியாக இருந்தேன்” என்று அவர் பேசினார்.
கீரவாணி
கங்கனாவைத் தொடர்ந்து பேசிய ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி “சந்திரமுகி முதல் பாகத்தில் எனது நண்பர் இசையமைப்பாளர் வித்யாசாகர் மிக சிறப்பாக இசையமைத்திருப்பார். இயக்குநர் வாசு ஒரு நல்ல மனிதர் என்று எனக்குத் தெரியும், ஆனால் அவர் நன்றாக பாடவும் கூடியவர்.
என்னுடைய அடுத்த படத்தில் நீங்கள் நிச்சயமாக பாடவேண்டும். இந்தப் படத்தில் வடிவேலு இல்லையென்றால் என்டர்டெயின்மென்ட்டே இல்ல. வடிவேலுக்காகவே இந்தப் படத்தை மக்கள் இரண்டு மூன்று முறைக்கு மேல் திரும்ப பார்ப்பார்கள்” என்று கூறினார்.
சந்திரமுகி 2
இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், கங்கனா ரனாவத் ஹீரோயினாக நடித்துள்ளார். வடிவேலு, மகிமா நம்பியார், ராதிகா லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் என பலரும் நடித்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்.19ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் சந்திரமுகி- 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.