தனது கணவரும், தேமுதிக தலைவர் விஜயகாந்தை தான் முதன்முதலாக சந்தித்த தருணத்தை பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்த நேர்காணல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த நேர்காணலில், “என்னை பெண் பார்க்க வந்த போது தான் நான் முதன்முதலில் கேப்டனை பார்த்தேன். உங்க எல்லோரையும் மாதிரி நான் திரையில் அவரை பார்த்து ரசித்தது தான் அதிகம். நான் கல்லூரியில் படித்த காலத்தில் உழவன் மகன் படத்தைப் பார்த்துவிட்டு, விஜயகாந்தின் தீவிர ரசிகையாக மாறி விட்டேன். அப்படியான நிலையில் எங்களுடைய திருமணம் பெற்றோர்கள் பார்த்து செய்து வைத்த திருமணம். கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என சொல்லப்படுவதற்கு எங்கள் திருமணம் சான்று.
காரணம் விஜயகாந்தின் சொந்த ஊர் மதுரை. எனக்கு வேலூர் என்பதால் இருவருக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவர் ஒவ்வொரு கார்த்திகை மாதமும் சபரிமலைக்கு 48 நாட்கள் மாலை அணிவித்து விரதம் இருப்பார். அப்படி ஒரு டிசம்பர் மாதம் தான் என்னை பெண் பார்க்க குடும்பத்தினரோடு வந்தார். காவி வேட்டி கட்டி, காலில் செருப்பு இல்லாமல், சன்னியாசி மாதிரி தான் வந்தார். அவரை எப்படி வரவேற்பது என்று என் வீட்டில் இருந்த அனைவரும் யோசித்து கொண்டிருக்கும் போது அவர் சாதாரணமாக எளிமையாக நடந்து வந்ததை என் அம்மா பார்த்து முடிவு செய்துவிட்டார்.
என்கூட பிறந்த சகோதரன் மாதிரி தான் விஜயகாந்தை பார்க்கிறேன். இப்படிப்பட்ட ஒருவருக்குத்தான் என் பொண்ணை கொடுப்பேன் என பெற்றோர்கள் முடிவு செய்துவிட்டனர். திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற இடத்தில் எல்லாம், சினிமா காரனுக்கு எப்படி பெண்னை கொடுக்குறீர்கள் என்று பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் என் பெற்றோர்கள் எங்களுக்கு விஜயகாந்த் மீது நம்பிக்கை இருக்கு, என் மகளை நன்றாக பார்த்துக்கொள்வார் என்று தீர்க்கமாக இருந்து திருமணம் செய்து வைத்தார்கள்.
பெண் பார்க்க வந்தபோது விஜயகாந்திடம் என்ன படம் நடிக்கிறீர்கள் என அப்பா கேட்டார். இப்போது மீனாட்சி திருவிளையாடல் ரிலீசாகி இருக்கு. அடுத்து சிறையில் பூத்த சின்னமலர் படத்தின் ஷூட்டிங்கிற்காக நாகர்கோயில் போறேன். அடுத்து புலன் விசாரணை படத்துக்காக மும்பை போறேன். போய்ட்டு வந்ததும் நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாம் என சொன்னார். விஜயகாந்த் என்னை திருமணம் செய்ய சம்மதம் சொன்ன பிறகு பல நாட்கள் எனக்கு தூக்கமே வரவில்லை.
எங்கள் திருமணம் 1990 ஆம் ஆண்டு ஜனவரியில் நடந்தது. மார்ச் மாதம் என்னுடைய முதல் பிறந்த நாள் வந்த போது 'V' என்ற எழுத்துப்போட்ட டாலரை பரிசாக கொடுத்தார். என்னிடம் எத்தனையோ நகைகள் இருக்கிறது என்றாலும், என் கணவர் கொடுத்த அந்த பரிசை பொக்கிஷம் போல இன்றும் பாதுகாத்து வைத்து இருக்கிறேன். நான் வாழ்நாளில் எனக்கு கிடைத்த பெரிய அவார்டு தான் அந்த பரிசு என பிரேமலதா தெரிவித்துள்ளார்.