தமிழ் நடிகர் விஷாலில் நடவடிக்கையால், இனி தமிழ் படங்களுக்கு தமிழகத்தில் இருந்தே சென்சார் சர்டிபிகேட் பெற்று கொள்ளலாம் என்ற அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 

மார்க் ஆண்டனி படத்திற்காக லஞ்சம்:


 

அண்மையில் விஷால் நடிப்பில் வெளிவந்த மார்க் ஆண்டனி படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. டைம் ஃபிக்‌ஷன் ஜானரில் எடுக்கப்பட்டிருந்த மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா நடித்திருந்தார். படம் நல்ல ஹிட் கொடுத்த நிலையில் இந்தியில் திரையிட முடிவெடுக்கப்பட்டது. ஆனால், மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் திரையிட ரூ.6.5 லட்சம் வரை மும்பை சென்சார் போர்டுக்கு தந்ததாக ஆதாரங்களுடன் விஷால் பேசியிருந்தார். 

 

மும்பை சென்சார் போர்டு தரப்பில் பணம் கேட்கும் பெண்ணின் ஆடியோவும், அதற்கான காசோலையும் விஷால் வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பினார். விஷாலின் புகாரை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து மத்திய அமைச்சகம், மும்பை சென்சார் போர்டு மீது அதிரடி விசாரணையை தொடங்கியது. லஞ்சம் பெற்றது தொடர்பாக சிபிசிஐடி விசாரணையும் நடைபெற்று வருகிறது. 

 

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை:



இந்த நிலையில் தமிழ் படங்களை இந்தியில் வெளியிட சென்சார் சர்டிபிகேட் வாங்கும் முறையில் அதிரடி மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதுவரை மும்பையில் மட்டுமே இந்தியில் வெளியாகும் தமிழ் படங்களுக்கு சென்சார் சர்டிபிகேட் வழங்கப்பட்டு வந்த நிலையில்,  இனி தமிழகத்திலேயே அந்த சான்றிதழ்களை பெற்று கொள்ளலாம் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ் மொழியுடன் சேர்த்து ஏற்கனவே தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளுக்கு தமிழகத்திலேயே சென்சார் சர்டிபிகேட் பெற்று கொள்ளும் வசதி இருந்து வந்த நிலையில் தற்போது இந்தி மொழி ரிலீஸ்க்கும் இந்த முறை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. விஷால் அளித்த புகாரினால் ஏற்பட்ட இந்த மாற்றத்துக்கு தமிழ் திரையுலக நடிகர்களும்,  தயாரிப்பாளர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

 

சென்சார் போர்டில் மாற்றம் கொண்டுவர காரணமாக இருந்த விஷாலுக்கு  தமிழ் சினிமா பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.