தஞ்சாவூர்: தஞ்சை அருகே புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு காணிக்கையாக வந்த புடவைகள் தஞ்சை பெரிய கோயிலில் பொது ஏலம் விடப்பட்டன. இதை ஏராளமானோர் ஏலத்தில் வாங்கிச் சென்றனர்.


தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா 1680 ஆம் ஆண்டில் திருத்தல யாத்திரை மேற்கொண்டபோது கண்ணபுரம் என்றழைக்கப்படும் சமயபுரத்தில் தங்கி வழிபாடு செய்தார். அன்றிரவு அரசனின் கனவில் அம்பிகை தோன்றினார். அப்போது, தஞ்சைக்குக் கிழக்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புன்னைக்காட்டில் புற்று உருவாய் உள்ள தன்னை வந்து வழிபடும்படி கூறினாராம் அம்பிகை.


அதன்படி, வெங்கோஜி மகாராஜாவும் தஞ்சைக்கு வந்து புன்னைக்காட்டுக்குச் சென்றார். அந்தக் காட்டுக்கு வழியமைத்த மகாராஜா, அம்பிகை  இருப்பிடத்தைக் கண்டறிந்து அங்கு சிறிய கூரை அமைத்துப் புன்னைநல்லூர் எனப் பெயர் சூட்டினார். மேலும், அந்தக் கிராமத்தையும் அந்த கோயிலுக்கே வழங்கினார்.


பின்னர், 1739 - 1763 ஆம் ஆண்டுகளில் ஆண்ட பிரதாப மகாராஜா, இந்தத் கோயிலுக்கு அருள்மொழிப்பேட்டை என்ற கிராமத்தை மானியமாக அளித்தார். மேலும் இக்கோயிலுக்கு வருவோர் அம்பாள், ஈசுவரனை வழிபடுவதுடன், பெருமாளையும் வழிபடுவதற்காக அம்பாளின் கோயிலுக்கு வட திசையில் கோதண்டராமர் கோயிலையும் கட்டி மானியங்களையும் வழங்கினார்.




1763 - 1787 ஆம் ஆண்டுகளில் தஞ்சையை ஆண்ட துளஜா ராஜாவின் புதல்விக்கு அம்மை நோயால் கண் பார்வை மங்கியது. அரசனின் கனவில் ஓர் அந்தணச் சிறுமி போல தோன்றிய அம்பிகை, தனது சன்னதிக்குப் புதல்வியுடன் வந்து வழிபடும்படி கூறி மறைந்தாராம். அரசனும் அரசகுமாரியுடன் சென்று அம்பிகையை வழிபட்டவுடன் அரசகுமாரி தனது பார்வையைத் திரும்பப் பெற்றார். இதில், மகிழ்ச்சி அடைந்த அரசன் அம்பிகைக்கு சிறியதொரு கோயிலைக் கட்டினார். மேலும், இந்தத் கோயிலைச் சுற்றி திருச்சுற்று மாளிகையையும் அமைத்தார். பிற்காலத்தில் இந்த மன்னரே ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளைக் கொண்டு புற்று உருவாய் இருந்த அம்பிகைக்கு மாரியம்மன் உருவத்தை வடிவமைத்து சக்கர பிரதிஷ்டையும் செய்தார். மேலும், கைலாசநாதர் என்ற சிவன் கோயிலையும் கட்டினார்.


பின்னர் சரபோஜி மகாராஜா இக்கோயிலில் மகா மண்டபம், நர்த்தன மண்டபம், முன் கோபுரம், பெரிய திருச்சுற்று ஆகியவற்றைக் கட்டி,  அம்பிகைக்குத் திருக்குடமுழுக்கு நடத்தினார். சிவாஜி மகாராஜா மூன்றாவது திருச்சுற்றைக் கட்டி வைத்து, மேலும் பல திருப்பணிகளைச் செய்தார். வெளி மண்டபம், போஜன சாலை, வடக்குக் கோபுரம் ஆகியவற்றை 1892 ஆம் ஆண்டில் சிவாஜி மன்னரின் துணைவியார் காமாட்சியம்பா பாயி சாகேப் கட்டினார்.


இரண்டாம் சிவாஜி ராஜா காலமான கி.பி. 1855 ஆம் ஆண்டில் கல்காரம் வரை  கட்டப்பட்டிருந்த ராஜகோபுரம் ஏழுநிலை கொண்ட அழகிய ராஜகோபுரமாக கட்டப்பட்டுள்ளது. கோயில் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் ஆனது என்பது தனிச் சிறப்பு. எனவே, கருவறையில் உள்ள அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. இக்கோவில் அறநிலையத் துறை மற்றும் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்டது இக்கோவில். உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தங்களது வேண்டுதல் நிறைவேற அம்மனுக்கு புடவை சாத்துவது வழக்கம். இவ்வாறு வரும் புடவைகளை ஏலத்தில் விடுவது வழக்கம்.


அந்த வகையில் பொதுமக்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டுச்சேலைகள், தஞ்சை பெரிய கோவிலில் பொது ஏலம் விடப்பட்டன. தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நடராஜர் மண்டபத்தில், பட்டுப்புடவை, பாலியஸ்டர் புடவை, நூல் புடவை, சின்னாளப்பட்டு, காட்டன் புடவைகள் ஆகியவை பொது ஏலம் விடப்பட்டது.


செயல் அலுவலர் மாதவன் மேற்பார்வையில் அறநிலையத்துறை ஆய்வாளர் ஜனனி முன்னிலையில் இந்த ஏலம் நடந்தது. அரண்மனை தேவஸ்தானம் சார்பில் மகாதேவராவ், மங்கையர்கரசி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஏலம் நாளையும் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.