பாலிவுட் திரைப்படங்களில் நீண்ட நாட்களாக நடித்து வரும் சில நடிகைகளில் ஒருவர் தபு. இவர் பாலிவுட் மட்டுமல்லாமல் தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளிவந்த திரைப்படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் காதல் தேசம், சிநேகிதியே, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 4ஆம் தேதி தபு தன்னுடைய 51ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
இந்தச் சூழலில் அவர் 2017ஆம் ஆண்டு கொடுத்த பேட்டி ஒன்று தற்போது மீண்டும் வலம் வர தொடங்கியுள்ளது. 2017ஆம் ஆண்டு அவர் ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்திருந்தார். அதில் தனக்கு ஏன் இவ்வளவு நாளாக திருமணம் நடக்கவில்லை என்று வெளிப்படையாக கூறியிருந்தார். இதுகுறித்து,”எனக்கு அஜய் தேவ்கனை ஒரு 25 ஆண்டுகளுக்கு மேலாக தெரியும். அவர் என்னுடைய சகோதரர் சமீர் ஆர்யாவின் வீட்டிற்கு பக்கத்தில் குடியிருந்தார். அப்போது எனக்கும் அஜய் தேவ்கனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் நான் வேறு எந்த ஒரு ஆண் நண்பரிடம் பேசினாலும் அஜய் தேவ்கனுக்கு அது பிடிக்காது.
அவர் உடனே அந்த ஆணிடம் சென்று சண்டை போடுவது போல் நடந்து கொள்வார். அத்துடன் நான் அப்போது எங்கு சென்றாலும் அவர் என்னை பின்தொடர்ந்து வருவார். எனக்கு அப்போது முதல் காதல் அமையாததற்கு அஜய் தேவ்கன் தான் முக்கிய காரணம். அதற்கு அவர் நிச்சயம் வருத்தப்பட வேண்டும்” எனக் கூறியிருந்தார். பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிகை கஜோலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தபுவின் இந்தப் போட்டி அப்போது மிகவும் பரப்பரப்பானது.
இந்தச் சூழலில் அவருக்கு 50வயது தாண்டிய பிறகும் மீண்டும் இந்த பேட்டி வலம் வருகிறது. ஏற்கெனவே திருமணம் தொடர்பாக 2014ஆம் ஆண்டு தபு ஒரு கருத்தை கூறியிருந்தார். அதில், “திருமணம் ஆகவில்லை என்றால் பலரும் உங்களுடைய வாழ்க்கை தொடர்பாக பல விமர்சனங்களை முன் வைப்பார்கள் அதற்கு நான் ஒன்னும் செய்ய முடியாது. ஆனால் உண்மையில் இந்த திருமணமாகாத அழுத்தம் என்னை மிகவும் பாடாக படுத்தியது. எனினும் ஒருவருக்கும் வாழ்க்கையில் சில சூழல்கள் உள்ளன. அவர்களை அதற்கு ஏற்ப தான் வாழவேண்டும். என்னுடைய இந்த சிங்கிள் வாழ்க்கைக்கும் என்னுடைய சூழலே காரணம்” எனத் தெரிவித்திருந்தார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: சூப்பர் சிங்கர் மாளவிகா ‛லிப் டூ லிப்’ கிஸ் - வைரலாகும் புகைப்படம்..!