பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 


 பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் இன்று தொடங்கியது.எப்போது விடுமுறை வரும் குழந்தைகள் காத்திருப்பது போல இந்நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 2024 ஆம் ஆண்டு ஜனவரி 14 அல்லது 21 ஆம் தேதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 7வது ஆண்டாக கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதில் முதல் போட்டியாளராக நடிகர் கூல் சுரேஷ் பங்கேற்றுள்ளார். 


கூல் சுரேஷின் பின்னணி


2001 ஆம் ஆண்டு பிரசாந்த் நடித்த சாக்லேட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சுரேஷ். தொடர்ந்து ஸ்ரீ, காதல் அழிவதில்லை, காக்க காக்க, திருடா திருடி தொடங்கி நடப்பாண்டு வெளியான பகாசுரன், டிடி ரிட்டர்ன்ஸ்,சந்திமுகி 2 வரை நடித்துள்ளார். நடிகர் சிலம்பரசனின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ், அவரது படங்களுக்கு சென்று ப்ரோமோஷன் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். 


அதுமட்டுமல்லாமல் 2022 ஆம் ஆண்டு வெளியான வெந்து தணிந்தது காடு படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் சொன்ன வசனங்களெல்லாம் உலகளவில் ட்ரெண்டானது. மேலும் எல்லா படங்களையும் முதல் நாள் முதல் காட்சி பார்த்து கூல் சுரேஷ் சொல்லும் விமர்சனம் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலம். 


இப்படியான நிலையில் சமீபத்தில் மன்சூர் அலிகான் நடித்த சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பெண் தொகுப்பாளருக்கு வலுக்கட்டயமாக மாலை அணிவித்தது கடும் சர்ச்சைகளை கிளப்பியது. இதற்கு வருத்தம் தெரிவித்து கண் கலங்கியபடி வீடியோ ஒன்றை வெளியிட்டு கூல் சுரேஷ் மன்னிப்பு கேட்டார். ஆனாலும் அவர் மீதான சர்ச்சை தொடர்கதையாகி வருகிறது.


கண்கலங்கிய கூல் சுரேஷ் 


இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் கலந்து கொண்டுள்ளார். சம்மர்ல சந்தோஷமா இருப்பிங்க.. கூல்-ன்னு பேர் வச்சிருக்கீங்க குளிர்காலத்துல குளிராதா என்ற ஜோக்கோடு கமல் அவரை வரவேற்றார். நான் பிக்பாஸ் வர காரணம் சிலம்பரசன், சந்தானம்,என்னுடைய நண்பர்கள் தான் என கூறி கண் கலங்கினார். அவரை தேற்றிய கமல் ஆரம்பமே சந்தோஷமாக கொண்டு போலாம் என நினைத்தேன். ஆனால் உங்களால காரியமே கெட்டு போயிரும் போலயே என கூறினார். 


நான் எப்பவும் ஒரு இடத்துக்கு போனாலும் அங்க ஒரு சத்தம் இருக்கும். ஆனால் இங்கே வர்றப்ப எனக்கு பேச்சே வரல. நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தான் வந்திருக்கிறனா என நம்ப முடியவில்லை. தொடர்ந்து “வெந்து தணிந்தது காடு.. கமல் சாருக்கு வணக்கத்தை போடு”  என ட்ரேட் மார்க் டயலாக்குடன் உள்ளே செல்ல முயன்ற கூல் சுரேஷ், “பிக்பாஸ் சீசன் 7.. உள்ளே போறது ஏழரை” என கூறினார். அவருக்கு கமல், சுரேஷ் என பெயரிடப்பட்ட செயின் ஒன்றை பரிசாக அளித்தார். கூல் என்பது நீங்களே உங்களுக்கு கொடுத்த பெயர். ஆனால் சுரேஷ் யார் என்பதை யார் மக்களுக்கு தெரிய வேண்டும் என சொல்லி உள்ளே அனுப்பி வைத்தார்.




மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil LIVE: தொடங்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 7 .. அடுத்தடுத்து வந்திறங்க போகும் போட்டியாளர்கள்..!