Big Boss 7 Tamil: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து பூர்ணிமா மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு வெளியேறுவார் என ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 ரசிகர்களிடையே பெரிதாக பேசுபொருளாகியுள்ளது. ஒரே வீட்டுக்குள் இருக்கும் 18 போட்டியாளர்களிடையே நடைபெற்றும் மோதல், வாக்குவாதம் பல்வேறு விமர்சனங்களுக்கும் வழி வகுத்துள்ளது. கடந்த வாரம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தை முன் வைத்து பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து இந்த வார எவிக்‌ஷனுக்கான நாமினேஷனில், அர்ச்சனா, விசித்ரா, தினேஷ், ஆர்.ஜே. பிராவோ, ஐஷூ, பூர்ணிமா உள்ளிட்டோர் இடம்பெற்றனர். 

 

இந்த வார எபிசோட் முழுவதும் பிரதீப்பை வெளியேறியதை வைத்து போட்டியாளர்கள் கண்டெண்ட்டை கிரியேட் செய்தனர். பிரதீப் வெளியேறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து விசித்ரா டீமும், பிரதீப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மாயா டீமும் மல்லுக்கட்டினர். இரு அணிகளும் குழாயடி சண்டையாய் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஒரு கட்டத்தில் பிக்பாஸையே கடுப்பாக்கினர். பூர்ணிமா மற்றும் மாயாவும், அர்ச்சனா மற்றும் விசித்ராவும் நீயா, நானா என்ற போட்டியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பிக்பாஸ் வீடே களேபரமானது. 

 

இந்த நிலையில் நாளை யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்ற கேள்வியை இப்பொழுதே ஃபேன்பேஸ் பகிர்ந்து வருகிறனர். அதன்படி ஒட்டுமொத்த பெண்கள் டீமையும் தனி ஆளாய் நின்னு ஒண்டிக்கு ஒண்டி வந்து பாரு என கட்டம் கட்டிய அர்ச்சனா 42 சதவீதம் ஓட்டு வாங்கி முதலிடத்தில் உள்ளார். அடுத்தத்தாக திட்டமிட்டு காய் நகர்த்தும் விசித்ரா 19 சதவீத வாக்குகள் பெற்றுள்ளார். நியாயமாக பேசுவதாக குரல் கொடுக்கும் தினேஷ் 16 சதவீத வாக்குகள் பெற்றுள்ளார். அவசியப்படும் இடத்தில் மட்டுமே பேசும் ஆர்ஜே பிராவோ 13 சதவீத ஓட்டுகள் பெற்றுள்ளார். 

 

நேரத்திற்கு ஏற்றார்போல் பேச்சை மாற்றிக்கொள்ளும் ஐஷூ மக்களின் நம்பிக்கையை பெற தவறியதால் 6 சதவீத ஓட்டு மட்டுமே பெற்றுள்ளார். இதேபோல், வம்படியாய் சண்டைக்கு செல்லும் பூர்ணிமா 5 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இதனால், நாளை மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு பூர்ணிமா வெளியேறுவார் என கூறப்படுகிறது. அதேநேரம் கடந்த நாட்களில் பிரதீப் மட்டும் இல்லாமல் கமல்ஹாசனை போட்டியாளர்கள் வெச்சு செய்ததால், வார இறுதியில் அவர் என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.