Japan Review in Tamil:
ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல், சுனில் வர்மா, விஜய் மில்டன், பவா செல்லதுரை, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “ஜப்பான்” (Japan). கார்த்தியின் சினிமா கேரியரில் 5வது தீபாவளி ரிலீசாக இப்படம் இன்று (நவம்பர் 12) வெளியாகியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜப்பான் படத்தின் விமர்சனத்தை(Japan Movie Review) இங்கு காணலாம்.
படத்தின் கதை
ஹை - கிளாஸ் திருடன் - காவல்துறை அதிகாரிகளுக்கு இடையே நடக்கும் சடுகுடு ஆட்டம் தான் "ஜப்பான்" படத்தின் அடிப்படை கதை என்பது ட்ரெய்லரை பார்த்த நமக்கே தெரிந்திருக்கும். அப்படி இருக்கையில் திரைக்கதையில் ராஜு முருகன் மேஜிக் பலித்ததா? என்று வாங்க பார்க்கலாம்...
கோவையில் மிகப்பெரிய நகைக்கடையில் ₹ 200 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்படுகிறது. இந்த நகைக்கடையில் உள்துறை அமைச்சரின் குடும்பத்துக்கும் பங்கு இருப்பதால் காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஒருபக்கம் சுனில் வர்மா, மறுபக்கம் விஜய் மில்டன் தலைமையிலான போலீஸ் குழு நடத்தும் விசாரணையில் இது ஜப்பான் (கார்த்தி) செய்த சம்பவம் என தெரிய வருகிறது.
இதனிடையே வாரி வழங்கும் வள்ளலாக இருக்கும் கார்த்திக்கு நடிகையாக வரும் சஞ்சு (அனு இம்மானுவேல்) மீது காதல் ஏற்படுகிறது. அவரை தேடி ஷூட்டிங் ஸ்பாட் செல்லும் கார்த்தியை ஸ்கெட்ச் போட்டு விஜய் மில்டன் தூக்க நினைக்க அனு இம்மானுவலோடு தப்பிக்கிறார். அப்படி செல்லும் வழியில் கார்த்தியுடன் டீல் பேசுகிறார் சுனில் வர்மா. ஆனால் தான் இந்த திருட்டை பண்ணவில்லை என்று கார்த்தி சொல்ல, அப்படி என்றால் இவ்வளவு பெரிய திருட்டை செய்தது யார்?.. கார்த்தியை இதில் சிக்க வைக்க என்ன காரணம்? என்பதை பரபரக்கும் திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறது "ஜப்பான்" படம்.
நடிப்பு எப்படி?
ஜப்பான் முனியாக கார்த்திதான் படத்தை ஆணிவேராக தாங்குகிறார். ஆதாரம் இல்லாமல் திருட்டு சம்பவம் செய்துவிட்டு அதையே படமாக எடுப்பது, யூடியூப் சேனல்களுக்கு பேட்டி தருவது என பெயருக்காகவும், புகழுக்காவும் ஜாலியான மனிதராக வலம் வருகிறார். கெட்டப் மட்டுமல்ல குரலையும் சற்று மாற்றி பேசுவது ரசிக்க வைக்கிறது. மேலும் விஜய் மில்டன், சுனில் வர்மா , வாகை சந்திரசேகர், ஜித்தன் ரமேஷ், கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் கதைக்கு தேவைப்பட்டிருக்கிறார்களே தவிர நடிப்பதற்கு பெரிய அளவில் காட்சிகளே இல்லை.
படம் எப்படி?
ஜாலி திருடனான கார்த்தியை, அதிகார மோதல் கொண்ட போலீஸ் அதிகாரிகளான விஜய் மில்டன், சுனில் வர்மா இருவரும் எப்படி பிடிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன் படம் பார்க்க தொடங்கினால் போக போக அது சற்று ஏமாற்றத்தையே உண்டாக்குகிறது. அதற்கு காரணம் பான் இந்தியா திருடனை பற்றிய கதை என்பதால் மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் திரைக்கதை குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
இதுவே விறுவிறுப்பாக செல்லவேண்டிய கதைக்கு தடையாகவும் அமைகிறது. அதேசமயம் போகிற போக்கில் அரசியல்,சினிமா, விளையாட்டு, காவல்துறை என அத்தனை ஏரியாவிலும் நடக்கும் தினசரி சம்பவங்களை வசனம் மூலம் பகடி செய்திருக்கிறார் ராஜூ முருகன். (முன்னதாக அவரது ஜோக்கர், ஜிப்ஸி படத்திலும் அரசை விமர்சித்து காட்சிகளும், வசனமும் வைத்திருப்பது நினைவிருக்கலாம்).
பின்னணி இசையை பொறுத்தவரை ஜி.வி. பிரகாஷ் குமார் படத்துக்கு தேவையானதை நிறைவாக செய்திருக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு சேஸிங் காட்சியிலும், சண்டை காட்சியை மெருகூட்டுகிறது. ஜப்பான் படத்தில் காமெடி, காதல், சோகம், ஆக்ஷன், திரில்லர் என எல்லாம் இருந்தாலும் அது எதுவுமே கதை என்னும் கோட்டில் புள்ளிகளாக இணையாமல் தனித்தே இருப்பது மிகப்பெரிய மைனஸ். ஆக, லாஜிக் இல்லாமல், தீபாவளி பண்டிகையை படத்துடன் கொண்டாடினால் போதும் என நினைப்பவர்கள் ஜப்பான் படத்துக்கு ஒரு விசிட் அடிக்கலாம்.