பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் முதல் வார கேப்டனாக விஜய் வர்மா தேர்வான நிலையில் அவரைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி
சின்னத்திரை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நேற்று (அக்டோபர் 1) மிகவும் விமரிசையாக தொடங்கியது. இரண்டு வீடுகள்.. ஒரு வாசல் என்ற கோட்பாடுடன் இந்த வீடு அமைந்துள்ளது. தொடர்ந்து 7வது ஆண்டாக நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில் இந்த சீசனில் மீண்டும் அதிகளவிலான இளம் போட்டியாளர்கள் களம் கண்டுள்ளனர். இதனால் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7வது பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் கூல் சுரேஷ், பவா செல்லதுரை,ரவீனா தாஹா, அக்ஷயா உதயகுமார், பிரதீப் ஆண்டனி, ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விஷ்ணு விஜய், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, விசித்ரா, நிக்ஸன், ஜோவிகா விஜயகுமார், மணி சந்திரா ஆகிய 18 பேரும் கலந்து கொண்டுள்ளனர். தொடக்கம் முதலே இந்நிகழ்ச்சி விறுவிறுப்பாக செல்ல தொடங்கியுள்ளது. அதன்படி கேப்டன்ஸி டாஸ்க் மிகவும் வித்தியாசமான முறையில் கையாளப்பட்டிருந்தது.
போட்டிப்போட்ட போட்டியாளர்கள்
அதன்படி உள்ளே வந்த முதல் நபரான கூல் சுரேஷ் மூலமே கேப்டன்ஸி டாஸ்க் தொடங்கியது. இதற்காக பேண்ட் ஒன்று கொடுக்கப்பட்டது. இதனைப் பெறும் போட்டியாளர்கள் தான் ஏன் இந்த வீட்டின் கேப்டனாக இருக்க நினைக்கிறேன் என்பதை சரியான பாயிண்டுகளோடு அடுத்தடுத்து வரும் போட்டியாளர்களிடம் கூற வேண்டும். ஒருவேளை பிற போட்டியாளர்கள் ஆமோதித்தால் பேண்ட் இருக்கும் நபரே கேப்டன் போட்டியில் தொடர்வார். அப்படி சக போட்டியாளரை சமாதானம் செய்து ஆதரவை பெற முடியாவிட்டால் வெளியேறிவிடுவார்.
இதில் தொடக்கத்தில் ஒவ்வொரிடமும் இருந்து பேண்ட் கைமாறிக் கொண்டே இருந்தது. சிலர் வாண்டட் ஆக வந்து தாங்கள் நல்லவர்கள் என்பதை விட்டுக் கொடுத்து நிரூபித்தனர். இன்னும் சிலர் அப்படியே சக போட்டியாளர்களை மூளைச்சலவை செய்தனர். இதில் பாடகர் யுகேந்திரன் வாசுதேவன் ஓரளவு டஃப் கொடுத்து பேசினார். ஆனால் இறுதியாக கடைசி போட்டியாளராக உள்ளே வந்த விஜய் வர்மா அதன்பின் போட்டியாளர்கள் இல்லை என்பதால் இந்த வார கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். இதனைப் பார்த்த ரசிகர்கள், அங்க 17 பேரும் கேப்டன் ஆக அடிச்சிட்டு இருக்கும்போது, இங்க நோகாமல் நுங்கு நின்ற கதையாக விஜய் வர்மாவை கேப்டன் பதவி தேடி வந்ததாக தெரிவித்து வருகின்றனர்.
யார் இந்த விஜய் வர்மா?
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் வர்மா, சிறு வயதில் அப்பா தவறியதால் சென்னைக்கு மொத்த குடும்பமும் குடிபெயர்ந்தது. படிப்பில் பெரிய அளவில் நாட்டமில்லாத நிலையில் விஜய்யை டான்ஸ் தன் பக்கம் இழுத்து கொண்டது. சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் குரூப் டான்ஸராக கலந்து கொண்ட அவர், 2008 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா? நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதிபோட்டி வரை சென்றார். பிரபுதேவா, அல்லு அர்ஜூன், ரவி தேஜா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ள விஜய் வர்மா, தலைவா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Bigg boss 7 Tamil: ஒவ்வொரு போட்டியாளருக்கும் கமல் கொடுக்கும் சர்ப்ரைஸ்... அதில் என்ன ஸ்பெஷல் பாருங்க...