பிக்பாஸ் சீசன் 7இல் பிரபல தமிம் எழுத்தாளர், கதை சொல்லி, நடிகர் என பன்முகத் திறமையாளராக வலம் வரும் பவா செல்லதுரை போட்டியாளராக பங்கேற்றுள்ள நிலையில்,  பவா செல்லதுரையைப் பற்றிய அறிமுகத்தைப் பார்க்கலாம்.


இலக்கியவாதி டூ நடிகர்


நவீன தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு பல்வேறு இலக்கிய  நிகழ்வுகளை தனது இளமைப் பருவத்தில் ஒருங்கிணைத்தவர் பவா செல்லதுரை. எல்லா நாளும் கார்த்திகை, டொமினிக், பஷீரின் அறை அவ்வளவு சீக்கிரத்தில் திறக்கப்படவில்லை உள்பட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.


திருவண்ணாமலையில் வசித்து வரும் பவா செல்லதுரை, சொந்தமாக வம்சி பதிப்பகம் என்கிற பதிப்பகத்தை தனது மனைவியும், எழுத்தாளர் மற்றும் மொழிப்பெயர்ப்பாளருமான ஷைலஜாவுடன் இணைந்து நடித்து  வருகிறார்.


தமிழின் மூத்த இலக்கியவாதிகள், நடிகர்கள், இயக்குநர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வரும் பவா செல்லதுரை, ராஜூ முருகன் இயக்கிய ‘ஜோக்கர்’ திரைப்படத்தில்  நடிகராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து மிஸ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ, ஜெய் பீம், வெந்து தணிந்தது காடு, பரம்பொருள், ரெஜினா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.


கதை சொல்லி


பவா செல்ல்த்துரையின் கதை சொல்லல் நிகழ்ச்சிகளுக்கு என தனி ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. தனது வாழ்க்கையில் நிகழ்ந்த அனுபவங்கள், தான் படித்த கதைகள், பிரபல புத்தகங்கள், எழுத்தாளர்களின் வாழ்க்கை, சினிமாவில் நடக்கும் கதைகள் என எல்லாவற்றையுமே தன்னுடைய தனித்துவமான பாணியில் சுவாரஸ்யமான கதைகளாக சொல்லக் கூடியவர் பவா செல்லத்துரை. இந்தக் காணொலிகள் இணையதளத்தில் மக்களால் பரவலாகப் பார்க்கப்பட்டு வருகின்றன.


கமல்ஹாசனுக்கே புத்தகப் பரிந்துரை


பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16ஆவது போட்டியாளராக உள்ளே வந்துள்ளார் பவா செல்லத்துரை. தன்னைப் பற்றிய பல்வேறு அனுபவங்களை பகிர்ந்துகொண்ட பவா செல்லத்துரையிடம் அனைத்து மக்களும்  நிச்சயம் படிக்க வேண்டிய ஒரு புத்தகத்தைப் பற்றி கமல்ஹாசன் கேட்டபோது, தனது மனைவி மொழிபெயர்த்த சிதம்பர ரகசியம் என்கிற புத்தகத்தைக் குறிப்பிட்டுள்ளார்.


பாலச்சந்திரன் சுள்ளிக்காடு சிறு சிறு அத்தியாயங்களாக எழுதிய அவரது அனுபவங்களை இந்தப் புத்தகத்தை சினிமா துறையில் படிக்காதவர் ஒருத்தர் கூட இருக்க முடியாது என்று பவா செல்லத்துரை தெரிவித்தார்.