பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகர் கூல் சுரேஷ் தொடர்பான வீடியோக்கள் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. 


பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நேற்று (அக்டோபர் 1) கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து 7வது ஆண்டாக கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியானது வார நாட்களில் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாகும் எனவும், வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் நேற்று நடைபெற்ற பிரமாண்டமான தொடக்க நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 


அதில் கூல் சுரேஷ், பவா செல்லதுரை, அக்‌ஷயா உதயகுமார், பிரதீப் ஆண்டனி, விஷ்ணு விஜய், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, ஜோவிகா விஜயகுமார், மணி சந்திரா, ரவீனா தாஹா ஆகிய 18 பேரும் கலந்து கொண்டுள்ளனர். இதில் பல இளம் வயதுடையவர்கள் கலந்து கொண்டுள்ளதால் இந்த பிக்பாஸ் சீசன் நிச்சயம் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கமல் சொல்வது போல தொடக்கம் முதலே இந்நிகழ்ச்சி விறுவிறுப்பாக செல்ல தொடங்கியுள்ளது. 






முதல் வார கேப்டன்ஸி டாஸ்க் மிகவும் வித்தியாசமாக செயல்படுத்தப்பட்டது. இதனால் இந்த வார வீட்டின் கேப்டனாக விஜய் வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனிடையே பிக்பாஸ் வீட்டில் முதல் போட்டியாளராக நுழைந்த கூல் சுரேஷ் நிகழ்ச்சியில் அறிமுகமாகும் போதே,  “வெந்து தணிந்தது காடு.. கமல் சாருக்கு வணக்கத்தை போடு”  என ட்ரேட் மார்க் வசனத்தை பேசினார். மேலும்  “பிக்பாஸ் சீசன் 7.. உள்ளே போறது ஏழரை” என கூறி உள்ளே சென்ற கூல் சுரேஷால் இந்த சீசனில் காமெடிக்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 


ஒரு நிகழ்வில் விஷ்ணு விஜய் அவரிடம் சென்று, “தலைவரே நீங்க பாட்டுக்கு வீட்டுக்குள்ள வந்துட்டிங்களே.. வெளியில நிறைய தயாரிப்பாளர்கள், நடிகர்கள், யூட்யூப் சேனல்கள், மீடியா எல்லாம் உங்களை தேடுவாங்களே..அப்ப 3 மாசம் எந்த படமும் ரிலீஸ் ஆகாதா? என கேள்வி எழுப்பினார். அதற்கு, “படம் ரிலீசாகும். நான் இங்கே இருந்து ப்ரோமோஷன் பண்னுவேன்” என கூலாக சுரேஷ் பதிலளித்தார். தொடர்ந்து இன்னொரு நிகழ்வில், “போட்டியாளர்களின் சூட்கேஸ்களை உள்ளே அனுப்புமாறு சக நபர்கள் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக கேமரா முன்னால் சென்ற கூல் சுரேஷ், “வெந்து தணிந்தது காடு..துணியை தூக்கி உள்ளே போடு” என தெரிவிக்க பின்னால் பெல் அடித்தது. எல்லாரும் சூட்கேஸ் வந்துவிட்டதாக ஆர்பரித்த நிலையில் கூல் சுரேஷ் மட்டும் கேமரா முன்னால் சென்று, “என் பவரு தெரிஞ்சுதா...வெந்து தணிந்தது காடு..பிக்பாஸூக்கு வணக்கத்தை போடு” என கத்துகிறார். இதனைப் பார்த்த இணையவாசிகள் உள்ளே சென்றும் பேச்சு குறையவில்லையே என கமெண்ட் செய்து வருகின்றனர். 




மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil Contestants: அழுதபடி பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்த கூல் சுரேஷ்.. கமல் முன்பு சிம்புவை புகழ்ந்ததால் பரபரப்பு..!