நடிகர் அசோக் செல்வன் அவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மனைவியும், நடிகையுமான கீர்த்தி பாண்டியனுடன் டான்ஸ் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சூது கவ்வும் படத்தின் மூலம் கடந்த 2013 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானவர் அசோக் செல்வன். அப்பாவியான தோற்றமும், சிரிப்பை வரவழைக்கும் பேச்சும் என ரசிகர்களை முதல் படத்திலேயே கவர்ந்தார். தொடர்ந்து தெகிடி, பீட்சா 2, கூட்டத்தில் ஒருவன், சில நேரங்களில் சில மனிதர்கள், ஹாஸ்டல், ஓ மை கடவுளே,நித்தம் ஒரு வானம், போர் தொழில் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் நடப்பாண்டு வெளியான ‘போர் தொழில்’ படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
தொடர்ந்து ப்ளூ ஸ்டார், சபாநாயகன் உள்ளிட்ட படங்களில் அசோக் செல்வன் நடித்து வருகிறார். வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அவர் ரசிகர்களின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக மாறியுள்ளார். இதனிடையே ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்தபோது நடிகை கீர்த்தி பாண்டியனுடன் அசோக் செல்வனுக்கு காதல் ஏற்பட்டது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக காதலித்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
அருண்பாண்டியனின் சொந்த ஊரான திருநெல்வேலி அருகேயுள்ள இட்டேரி கிராமத்தில் அமைந்துள்ள பண்ணை வீட்டில் இந்த திருமணம் நடைபெற்றது. இதன் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியது. இதற்கிடையில் சென்னையில் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், சாந்தனு, ஹரீஷ் கல்யாண், ஆர்யா, கலையரசன்,வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், ஜனனி, மஞ்சிமா மோகன் என பலரும் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில் கீர்த்தி பாண்டியனை அசோக் செல்வன் திருமணம் செய்தது பலராலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் கீர்த்தியை உருவகேலி செய்து பலரும் மோசமான கமெண்டுகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அசோக் செல்வன், “உலகில் மிக அழகான பெண்ணுடன் நான்” என்ற கேப்ஷனுடன் கீர்த்தி பாண்டியனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.
இந்நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் இருவரும் டான்ஸ் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் ரஜினிகாந்த் நடித்த முத்து படத்தில் இடம் பெற்ற தில்லானா.. தில்லானா பாடல் ஒலிபரப்பாக இருவரும் உற்சாகமாக நடனம் ஆடுகின்றனர். இதனை பலரும் ஸ்டேட்டஸ், ஸ்டோரியாக வைத்து அவர்களின் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.
மேலும் படிக்க: ‘கடவுள் கண்ணை பறித்து கீழே இறக்கி விட்டார்’ .. சினிமா வாழ்க்கை குறித்து எஸ்.ஜே.சூர்யா உருக்கம்..!