ரசிகர்கள் எனக்கு கொடுத்துள்ள அங்கீகாரத்தை சரியாக பயன்படுத்தி கொள்வேன் என மார்க் ஆண்டனி படத்தின் வெற்றி விழாவில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.
இளம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா, சுனில் வர்மா, செல்வராகவன், ஒய்.ஜி.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்த படம் ‘மார்க் ஆண்டனி’ . இந்த படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியானது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
செல்போன் மூலம் டைம் டிராவல் என்ற அடிப்படையிலான கதையில் விஷால், எஸ்.ஜே.சூர்யா இருவரும் தந்தை, மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக 80களில் நடக்கும் காட்சிகளுக்காக மறைந்த பிரபல நடிகை சில்க் ஸ்மிதாவின் காட்சிகளும் வைக்கப்பட்டுள்ளது. இதில் சில்க் வேடத்தில் அவரைப் போலவே உருவ ஒற்றுமை கொண்ட விஷ்ணு பிரியா நடித்திருந்தார். இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.100 கோடி வரை வசூலித்ததாக விஷால் கூறியுள்ளார்.
இப்படியான நிலையில் மார்க் ஆண்டனி படத்தின் வெற்றி கொண்டாட்டம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் எஸ்.ஜே.சூர்யா தன் திரையுலக பயணம் குறித்து மிகவும் உருக்கமாக பேசினார். அதாவது, “மார்க் ஆண்டனி படத்துக்கு நல்ல விமர்சனங்கள், வசூல், பாராட்டு எல்லாம் கிடைக்குது. அதையெல்லாம் விட எல்லோரையும் கவலைகளை மறக்க வச்சு, மனசு விட்டு சிரிக்க வைத்திருக்கிறது என நினைக்கும்போது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. நான் விஷாலிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.
நமக்குள் இருக்கும் இந்த அன்பான உறவு எப்போதும் தொடர வேண்டும். அவதூறான பேச்சுகளால் எதுவும் மிஸ் ஆகி விட கூடாது. நாம இன்னும் 2 படங்கள் இல்லை, 20 படங்கள் கூட சேர்ந்து பண்ணலாம். ஸ்கிரீனில் இவ்வளவு பெரிய ஸ்பேஸ் கொடுத்த உங்கள் பரந்த மனதை பார்க்கும்போது எனக்கு, 'இவன்தான்டா ஹீரோ' என சொல்ல தோன்றுகிறது.
மேலும் ஒரு சிறந்த நடிகனாக வர வேண்டும் என ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்த காலத்தில் இருந்தே பல வருடமாக போராடிக் கொண்டிருக்கிறேன். 2004 ஆம் ஆண்டு நியூ படமும், 2005 ஆம் ஆண்டு அன்பே ஆயிருரே படமும் நான் ஹீரோவாக நடித்து வெளியாகி பட்டையை கிளப்பியது. கோயம்புத்தூரில் அன்றைக்கு பெரிய ஸ்டார் படங்கள் ரூ.1.4 கோடி வியாபாரமான நிலையில், என் படம் ரூ.1 கோடிக்கு வியாபாரம் ஆனது. இப்படி கடவுள் உச்சத்திற்கு என்னை கொண்டு சென்று விட்டு கண்ணை பறித்து கீழே இறக்கி விட்டார். பல வருடங்கள் காணாமல் போன நீண்ட இடைவெளிக்குப் பிறகு `இசை', `இறைவி' படங்கள் மூலம் மீண்டு வந்தேன்.
இறைவி படத்தின் மூலம் தான் என் வாழ்க்கை மீண்டும் ஆரம்பித்தது. கார்த்திக் சுப்பராஜூக்கு நன்றி. இதனைத் தொடர்ந்து பல பெரிய இயக்குநர்கள் படங்களில் நடித்து மாநாடு, இப்போ மார்க் ஆண்டனி வரை வந்துள்ளேன். நான் அடிக்கடி கடவுளிடம், ‘என்னை மிகவும் ரசித்த மக்கள் மனதில் மீண்டும் எனக்கு ஒரு நல்ல இடம் கிடைக்காதா?’ என கேட்பேன். அது மார்க் ஆண்டனி படம் மூலம் சாத்தியமாகியுள்ளது. ரசிகர்கள் எனக்கு கொடுத்துள்ள அங்கீகாரத்தை சரியாக பயன்படுத்தி உங்களை மகிழ்ச்சியடைய செய்வேன் என எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Cool Suresh: கூல் சுரேஷின் சர்ச்சை செயல்.. இனிமேல் ‘பளார்’ தான்.. தொகுப்பாளினி ஐஷ்வர்யா ரகுபதி எச்சரிக்கை..!