ஜெயிலர் படத்தில் அந்த சீனை ஒரே டேக்கில் நடித்து கொடுத்ததை பார்த்த ரஜினி, என்னை கட்டிப்பிடித்து பாராட்டினார் என அறந்தாங்கி நிஷா உணர்ச்சி பொங்க பேசியுள்ளார். 


வசூல் குவிக்கும் ஜெயிலர்:


ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கி இருக்கும் ஜெயிலர் படம் இன்று வெளியாகி சினிமா ரசிகர்களை திருவிழாவாக கொண்டாட வைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சரவணன், யோகிபாபு, தமன்னா, அறந்தாங்கி நிஷா, சிவராஜ்குமார், சுனில், மிர்னா, வசந்த் ரவி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்று இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரிலீசாகி உள்ள ஜெயிலர் படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


இந்த கொண்டாடத்தில் இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்றுள்ள ரஜினியுடன் வடமாநில ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளனர். ஜெயிலர் படத்தை பார்த்த திரை பிரபலங்கள் வாழ்த்து கூறி வரும் நிலையில் ரஜினியுடன் படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்த அறந்தாங்கி நிஷா பிரபல ஊடகத்திற்கு அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. 


அறந்தாங்கி நிஷா நெகிழ்ச்சி:


அதில், “கோலமாவு கோகிலா படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததை போல், ஜெயிலர் படத்திலும் நடிக்க நெல்சன் வாய்ப்பு கொடுத்தார். முன்னதாக ரஜினியுடன் நடிக்க போவது தனக்கு தெரியாது. முதல் சீனே ரஜினியுடன் நடிக்க வேண்டும் என கூறியதும் பயத்தில் நடுங்கினேன். இரவு 12 மணியளவில் டயலாக் பேப்பரை என்னிடம் கொடுத்தனர். ஒரே டேக்கில் அந்த சீன் டயலாக்கை நடித்து கொடுத்து விட்டேன். அதை பார்த்த ரஜினி என்னை கட்டிப்பித்து பாராட்டினார். ஒரே டேக்கில் இந்த டயலாக் சீனை நடித்துள்ளார். நானாக இருந்தால் 22 டேக் எடுத்து இருப்பேன் என ரஜினி என்னிடம் கூறினார்” என்று அறந்தாங்கி நிஷா கூறியுள்ளார். 






மேலும், நடித்து முடிக்க இரவு 1 மணி ஆனதாகவும், அந்த நேரத்தில் தனது கணவருக்கு போன் செய்து தனது நடிப்பை ரஜினி கட்டிப்பிடித்து பாராட்டியதாகவும் கூறினேன் என அறந்தாங்கி நிஷா கூறியுள்ளார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமான அறந்தாங்கி நிஷா, நகைச்சுவையாக பேசி தனக்கு என தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.


விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக அறந்தாங்கி நிஷா பங்கேற்றிருந்தார். அவரது நகைச்சுவை பேச்சால் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சமுத்ரகனியின் ஆண் தேவதை, தனுஷின் மாரி 2, ஜீவா நடித்த கலகலப்பு 2, நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, தனுஷின் திருசிற்றம்பலம், அர்ஜூன் தாஸின் அநீதி படங்களில் நடித்துள்ளார்.


மேலும் படிக்க: Jailer Review: ‘தியேட்டரில் தலைவரு அலப்பறை’ .. ரஜினியின் ஜெயிலர் படம் எப்படி? .. முதல் விமர்சனம் இதோ..!