இயக்குநரும் நடிகருமான மாதவன் இயக்கி தேசிய விருது வென்றுள்ள ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ படம் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
69ஆவது தேசிய திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பு கடந்த 24ஆம் தேதி வெளியானது. இதில் நடிகர் மாதவன் இயக்கி நடித்திருந்த ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது. இதனைத் தொடர்ந்து பலரும் நடிகர் மாதவனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “வாழ்த்துகள் மாதவன். கேன்ஸ் திரைப்பட விழாவில் ராக்கெட்ரி திரைப்படம் பார்த்தபோது எனக்கு ஏற்பட்ட தாக்கம் இன்னும் நினைவில் இருக்கிறது. ஓப்பன்ஹெய்மர் படத்தை விட உங்கள் படம்தான் பிடித்திருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்தியாவில் 2022 ஜூலை 1ஆம் தேதி இப்படம் வெளியானது. விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவான இத்திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றது.
நடிகர் மாதவன் 1996ஆம் ஆண்டு வெளியான ‘இஸ் ராத் கி சுபாக் நகின்’ என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழில் வெளியான ‘அலைப்பாயுதே’ திரைப்படம் மூலம் இவர் கோலிவுட்டிற்கு வருகை தந்தார். முதல் தமிழ் திரைப்படத்திலேயே சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதை மாதவன் பெற்றார்.
மின்னலே, என்னவளே, டும், டும், அன்பே சிவம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் மாதவன் நடித்துள்ளார். 2012ஆம் ஆண்டுக்கு பின் தமிழில் மாதவன் நடிப்பில் எந்தத் திரைப்படமும் வெளியாக நிலையில், 2016ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
நடிகர் மாதவன் அறிமுக காலக்கட்டத்தில் ஒரு சாக்லேட் பாயாக வலம் வந்தார். அவருக்கு ஏராளமான பெண் ரசிகைகள் இருந்தனர். அலைபாயுதே படத்தில் இவர் ரயில்வே ஸ்டேஷனில் ஷாலினியிடம் பேசும், “நீ அழகா இருக்கனு நினைக்கல, உன்னை லவ் பண்ணல. ஆனா, இதெல்லாம் நடந்துடுமோனு பயமா இருக்கு” எனும் டயலாக் செம ரீச் ஆனது. தற்போதும் நடிகர் மாதவனின் நடிப்பில் தொடர்ச்சியாக படங்கள் வெளியாகவில்லை என்றாலும் அவருக்கென்று கோலிவுட் டூ பாலிவுட் வரை தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
மேலும் படிக்க
G. K. Mani: அச்சச்சோ.. மருத்துவமனையில் ஜி.கே.மணி.. நேரில் சென்று விசாரித்த ராமதாஸ்..! ஏன் என்னாச்சு?