G. K. Mani: பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தொண்டை வலி காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவனையில் ஜி.கே.மணி:
பா.ம.க கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கடந்த சில நாட்களாக தொண்டை வலி, தலைச்சுற்றல், தலை வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டபோது அவருடைய தொண்டை குரல் வளையில் இருக்கும் கட்டியை உடனே அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். இதனால் சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று ஜி.கே.மணி அனுமதிக்கப்பட்டார். அதன்பின், நேற்றைய தினமே அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தொண்டையில் இருந்த கட்டி அகற்றப்பட்டது. தற்போது, அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நலம் விசாரித்த ராமதாஸ்:
இதற்கிடையில், அறுவை சிகிச்சைக்கு முன்பு, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சென்று, ஜி.கே.மணியை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார் ராமதாஸ். ஜி.கே. மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பா.ம.க. தொண்டர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜி.கே.மணி:
பட்டாளி மக்கள் கட்சியில் நீண்ட காலமாக தலைவராக இருந்தார் ஜி.கே.மணி. பின்பு, கட்சியின் எதிர்கால நலன் கருதி கவுரவத் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், அன்புமணி ராமதாஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை அடுத்து, கட்சியின் கவுரவத் தலைவராக இருக்கும் ஜி.கே.மணி, தமிழக சட்டசபை உறுப்பினராகவும் தொடர்கிறார். அவரது தொகுதியான பென்னாகரத்திற்கு அடிக்கடி சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்து நிவர்த்தி செய்து வருகிறார். மேலும், அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை கண்காணிப்பார். அதேபோல, பாமக நிறுவனர் ராமதாஸின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராகவும் நீண்ட காலமாக இருப்பவர் ஜி.கே. மணி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க